கில்லி….சாதனைக்காக டாட்டன்ஹேம்

அடுத்த சீசனுக்கான முனைப்பில் ஒவ்வொரு அணியும் பல கோடிகளை செலவு செய்து வீரர்களை அள்ளி வரும் நிலையில், லண்டனை சேர்ந்த டாட்டன்ஹேம் அணி, புதிதாக எந்த வீரரையும் வாங்காத முதல் அணி என்ற சாதனையை படைக்கவுள்ளது.

காரெத் பேல், லூக்கா மாட்ரிச் என தங்களது நட்சத்திர வீரர்களை இழந்து இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட டாட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்ஸ் அணிக்கு, வரமாக அமைந்தார் மாரிசியோ பொச்செட்டினோ. அர்ஜென்டினாவை சேர்ந்த இளம் பயிற்சியாளரான இவர், எஸ்பானியோல், சவுத்ஹேம்ப்டன் என சென்ற இடமெல்லாம் அசுர வளர்ச்சி அடைந்து வந்தார். பணம் நிறைய கையில் இருந்தாலும், டாட்டன்ஹேம் அதற்கு ஏற்ற வீரர்களை வாங்காதது தொடர்ந்து தொய்வை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார் பொச்செட்டினோ.

அவர் வந்ததில் இருந்து, திடமாகவும், புதிய உத்வேகத்துடனும் ஆடத் துவங்கினர் டாட்டன்ஹேம் வீரர்கள். மோசமாக டிபெண்ட் செய்து வந்த வீரர்கள் ஒழுக்கமாக விளையாடினர்; கடுமையாக பயிற்சி எடுத்தனர். இதன் பலனாக குறைந்த அளவு கோல்களை விடும் அணிகளுள் ஒன்றாக டாட்டன்ஹேம் வளர்ந்தது. அதிரடி வீரர் ஹேரி கேன், மற்றவர்களை போல பெரிய அணிகள் அழைத்தவுடன் சென்றுவிடுவார் என்ற பயம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால்,  பொச்செட்டினோ மீது இருந்த நம்பிக்கையால் அவர் எங்கும் செல்லாமல், புதிய காண்ட்ராக்டில் கையெழுத்திட்டார். அதைப்போலவே, டாட்டன்ஹேம் அணியன் ‘மேஜிசியன்’ கிறிஸ்டியன் எரிக்சனும் வேறு அணிக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டார்.

முக்கிய வீரர்கள் செல்லாததாலும், டெலி ஆலி போன்ற இளம் வீரர்களின் சூப்பர் ஃபார்மாலும், அடுத்த சீசனுக்கு புதிதாக எந்த வீரரையும் வாங்க வேண்டாம் என டாட்டன்ஹேம் முடிவெடுத்துள்ளதாம். இதுவரை எந்த வீரரையும் அந்த அணி வாங்க முயற்சிக்கவில்லை. இந்த மாத முடிவில் இதே நிலை நீடித்தால், பிரீமியர் லீக் ட்ரான்ஸ்பர் விண்டோ சரித்திரத்திலேயே முதல்முறையாக, ஒரு அணி எந்த புதிய வீரருடனும் ஒப்பந்தம் போடாத சாதனையை டாட்டன்ஹேம் படைக்கும்.

Sharing is caring!