குர்ணால் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்; தங்கம், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு வந்ததால் விசாரணை: அபராதம் விதிப்பு?

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் குர்ணால் பாண்டியா துபாயிலிருந்து மும்பை திரும்பியபோது ஏராளமான தங்கம், விலை உயர்ந்த பொருட்கள் அவரிடம் இருந்ததால், சுங்கத்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர் குர்ணால் பாண்டியா. துபாயில் கடந்த செவ்வாய்க்கிழமை ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டித் தொடர் முடிந்தபின் இந்திய அணியினர் துபாயில் இருந்தவாறே, அவுஸ்திரேலியத் தொடருக்கு புறப்பட்டுச் சென்றனர். மற்ற வீரர்கள் தாயகம் திரும்பினர்.அப்போது, மும்பை இந்தியன்ஸ் வீரர் குர்ணால் பாண்டியா கொண்டுவந்த பொருட்களை மும்பை விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் கணக்கில் வராத தங்கம், விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வுத் துறையினர் குர்ணால் பாண்டியாவைத் தனியாக அழைத்துச் சென்று 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குர்ணால் பாண்டியாவிடம், விசாரணை நடத்தப்பட்டது குறித்து வருவாய் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “குர்ணால் பாண்டியாவிடம் 2 ரோலக்ஸ் வாட்ச்சுகள், ஆடிமார் பீகட் வாட்ச்சுகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம். இது தவிர சில விலை உயர்ந்த பொருட்கள், தங்கம் போன்றவை இருந்தன. இதில் இரு கைக் கடிகாரங்கள் தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவிற்குச் சொந்தமானது. அவர் அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றதால் தான் கொண்டுவந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த விவகாரம் சுங்கத்துறைக்கு மாற்றப்பட்டது.

குர்ணால் பாண்டியா கொண்டுவந்த கைக் கடிகாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் அது அசலானவை எனத் தெரியவந்தது. அவருக்கு முறைப்படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பில் 60 சதவீதம் வரி,அபராதம் விதிக்கப்படுவது முறையாகும். ஆனால், அதுகுறித்து சுங்கத்துறையினர் முடிவு செய்வார்கள்” எனத் தெரிவித்தனர்.

ஆனால், குர்ணால் பாண்டியா கொண்டுவந்த நகைகளின் மதிப்பு குறித்து ஏதும் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Sharing is caring!