கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரயன்ட் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு!

அமெரிக்க கூடைப்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரரும், ஜாம்பவானுமான கோப் பிரயன்ட், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜாம்பவான் கோப் பிரயன்ட் தனது 13 வயது மகள் கியானாவுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் ஹெலிகொப்டரரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் இவர்கள் பயணித்த சிக்ரோஸ்கி எஸ் 76 ரக ஹெலிகாப்டர், லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் உள்ள கலபாசாஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தின் போது, ஹெலிகாப்டரில் இருந்த கோபி பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

கோப் பிரயன்ட், தனது 20 ஆண்டு விளையாட்டு அனுபவத்தில் மிகப் பெரிய புள்ளிகளை எடுத்துள்ளார். பல இரசிகர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் முன்மாதிரியான அவரின் இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூடைப்பந்து துறையில் மகத்தான வீரராக பார்க்கப்படும் கோபி பிரயன்ட்டுக்கு தற்போது அனைத்துவகை விளையாட்டு பிரபலங்கள், நாட்டு தலைவர்கள் இரசிகர்கள் என அனைவரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

பனிமூட்டமான வானிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து வடமேற்கே 30 மைல் தொலைவில் உள்ள கலபாசாஸ் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களாக கூடைப்பந்து விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த புகழ் பூத்த வீரர் பிரயன்ட், பிலடெல்பியாவைச்  சேர்ந்தவர். இவருக்கு மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

41 வயதான கோப் பீன் பிரயன்ட் , என்.பி.ஏ.இல் லாஸ் ஏஞ்சல்ஸ் லேகர்ஸ் என்ற அணியில் 20 ஆண்டு காலங்கள் விளையாடினார்.

பாடசாலை படிப்பை முடித்துக் கொண்டு நேரடியாக என்.பி.ஏ. சங்கத்தில் இணைந்தார். ஐந்து முறை என்பிஏ வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 18 முறை என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார்.

கடந்த சனிக்கிழமைதான் கோபி பிரயன்ட், ஜாம்பவான் வீரரான லிபிரான் ஜேம்ஸின் புள்ளிகள் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!