கெயில் ’டக்’ அவுட் ஆனாலும் வங்கதேசத்திற்கு மெர்சல் காட்டிய வெஸ்ட் இண்டிஸ்: 322 ரன்கள் இலக்கு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசத்திற்கு வெற்றி இலக்காக 322 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டவுண்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயில், லீவிஸ் களமிறங்கினார்கள்.

வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், கெயில், லீவிஸ் திணறினார்கள். இதில் ரொம்பவும் திணறி வந்த கெயில், 13 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்கமுடியாமல் சைய்புதின் பந்துவீச்சில் கீப்பர் ரஹீமிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

இதையடுத்து, கீப்பர் ஷாய் ஹோப் களமிறங்கினார். இவரும், லீவிசும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லீவிஸ் 58 பந்தில் அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய லீவிஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் சாஹீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய பூரான் அதிரடியாக ஆடி 30 ரன்களில் ஆட்டமிழக்க, இதனிடையே ஹோப் 75 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.

பூரானை தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மேயர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 25 பந்தில் அரைசதம் அடித்து அசத்தி, அடுத்த பந்திலேயே (முஸ்தாபுகீர் பந்துவீச்சில்) ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரரான ரஸ்ஸல் அதேஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த போதிலும், அணியின் ஸ்கோர் அப்போது, 40 ஓவர்களுக்கு 243 என வலுவாக இருந்தது.

ரஸ்ஸலை தொடர்ந்து வந்த, கேப்டன் ஹோல்டர்,  ரஸ்ஸல் காட்டாத அதிரடியை, அவர் காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 15 பந்தில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன் எடுத்து சைய்புதின் பாலில் ஆட்டமிழந்தார். இதனிடையே நன்றாக ஆடி வந்த ஹோப் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களில் முஸ்தாபுகீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து, சதத்தை தவறவிட்டார்.

ஹோல்டருக்கு பிறகு களமிறங்கிய டிவைன் பிராவோ அதிரடியாக ஆடி தனது பங்கிற்கு 19 ரன்கள் அடித்து, ஆட்டத்தின் கடைசி பந்தில் போல்ட் ஆனார்.

இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து, வங்கதேசம் வெற்றி பெற 322 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தாமஸ் 6 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹோப் 96, லீவீஸ் 70, ஹெட்மேயர் 50 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் முஸ்தாபுகீர், சைய்புதின் தலா 3, சஹீப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

Sharing is caring!