கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபோஸ்டர் நியமனம்!

இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐ.பி.எல். ரி-20 தொடர் மார்ச் 29ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இறுதிப்போட்டி மே 29ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது.

இத்தொடருக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அந்த ஏலத்தில் ஓவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்தது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிகளின் தலைவர்கள், பயிற்சியாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் இரண்டு முறை சம்பியன் கிண்ணம் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, புதிய களத்தடுப்பு பயிற்சியாளரை நியமித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான ஜேம்ஸ் ஃபோஸ்டரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

ஜேம்ஸ் ஃபோஸ்டர் 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணிக்காக ஏழு டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஃபோஸ்டர், கவுண்டி அணியான கிளாமோர்கன் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

இதுதவிர, பிக் பேஷ் லீக்கில் சிட்னி தண்டர், பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குல்னா டைட்டன்ஸ், இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் ஆகிய அணிகளுடனும் தொடர்பில் உள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுபாதீப் கோஷ், இதற்கு முன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக இருந்தார். ஆனால் தற்போது அவரை அணி நிர்வாகம் மாற்றியுள்ளது.

கடந்த வருட ஐ.பி.எல். தொடரில் முதல் 5 போட்டிகளில் நான்கில் வெற்றியடைந்த கொல்கத்தா அணி, பிறகு தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 போட்டிகளில் வென்றது.

எனினும் இறுதி லீக் போட்டியில் தோல்வியடைந்ததால், புள்ளிகள் பட்டியலில் 5ஆம் இடம் பிடித்து பிளே ஓஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது.

எதிர்வரும் ஐ.பி.எல். தொடரை முன்னிட்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் பல மாற்றங்களை அணி நிர்வாகம் கொண்டு வந்தது.

இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஜெக் கலிஸ், நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து பரஸ்பர அடிப்படையில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அத்தோடு, உதவி பயிற்சியாளராக செயற்பட்டு வந்த அவுஸ்ரேலியாவின் முன்னாள் வீரர் சைமன் கேடிச்சும் பதவிலியிருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2008ஆண்டு முதல் 2010ஆண்டு வரையும், 2012ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையும் வீரராக பங்கேற்று அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிரெண்டன் மெக்கலம் அணியின் பயிற்சியாளராக, நியமிக்க்பட்டார்.
…………
வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தியாவில் சிறந்த உள்ளூர் வீரர்களை இனங்காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடர், சர்வதேச வீரர்களின் வருகையால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தப் போட்டித் தொடருக்கான எதிர்பார்ப்பு நீண்டுக் கொண்டே தான் செல்கின்றது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 ஐ.பி.எல். தொடர்களில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் சம்பியன் பட்டத்தை வென்றதே கிடையாது.

ராஜஸ்தான் றோயல்ஸ், டெக்கன் சார்ஜஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் தலா ஒருமுறையும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 ஐ.பி.எல். தொடர்களில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் சம்பியன் பட்டத்தை வென்றதே கிடையாது.

Sharing is caring!