சதமடித்து மாஸ் காட்டிய தோனி, ராகுல் ….இந்தியா 359 ரன்கள் குவிப்பு

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் ராகுல், தோனியின் சிறப்பான சததத்தால், இந்திய அணி 359 ரன்கள் குவித்துள்ளது.

கார்டிபில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, தவான் களமிறங்கினார்கள்.

தவான் 1, ரோகித் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், கோலி, ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி 47 ரன்னில் சைபூதின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற, இதையடுத்து வந்த விஜய் சங்கரும் 2 ரன்னில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோரி 22 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து தோனி களமிறங்கினார். இவரும் ராகுலும் சேர்ந்து முதலில் பொறுமையாக ஆடி வந்தனர். இதன் பின்னர் ஆட்டம் இருவருக்கும் செட் ஆன பிறகு வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

சிறப்பாக ஆடி வந்த ராகுல் 94 பந்துகளில் சதமடித்தார். இதன் பின், சபீர் பந்துவீச்சில் 108 ரன்கள் எடுத்திருந்தபோது போல்ட் ஆனார். ராகுல் சென்ற சிறிது நேரத்தில் தோனி 73 பந்துகளில் சிக்ஸர் மூலம் சதம் கண்டார்.

Sharing is caring!