சர்வதேசத்தை வெற்றிகொள்ளத் துடிக்கும் மலையக இளைஞர்

வறுமையுடனான போராட்டம் உச்சபட்ச சாதனைக்கு வித்திடுகிறது. அவ்வாறு சர்வதேசத்தை வெற்றிகொள்ளத் துடிக்கும் இளைஞர் தான் மாதவன் ராஜகுமாரன்.

பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரின் மகனாகப் பிறந்து நொடிக்கு நொடி வறுமையால் ஆட்கொள்ளப்பட்ட மாதவன் ராஜகுமாரன் இன்று தெற்காசியாவை வென்ற கட்டழகராகத் திகழ்கிறார்.

3 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் தலைப்பிள்ளையான 23 வயதான ராஜகுமாரன், தனது 15 வயது முதல் கட்டழகர் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார்.

மத்திய மாகாணத்தின் புஸ்ஸல்லாவ – லபுக்கலை, கொண்டகலை தோட்டத்தை சேர்ந்த இவர் சர்வதேசத்தை வெற்றிகொள்ளும் கனவில் காத்திருக்கிறார்.

மலையகம் என்றாலே இயற்கையும் அழகும் தான் நினைவிற்கு வரும். ஆனால், அதனையும் தாண்டி அங்கு வறுமையும் போசாக்கின்மையும் நீண்டகால நெடுந்துயராக தொடர்கின்றது.

இந்த அத்தனை தடைகளையும் தாண்டி மாதவன் ராஜகுமாரன் இன்று தெற்காசிய அரங்கில் பிரகாசித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி சீனாவின் ஹேர்பின் நகரில் நடைபெற்ற 53 ஆவது ஆசிய கட்டழகர் போட்டிகளில் ராஜகுமாரன் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று சாதித்தார்.

கடந்த வருடம் நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய கட்டழகர் போட்டியில் ராஜகுமாரன் நமது தேசத்தை தங்கப் பதக்கத்தால் அலங்கரித்தார்.

வறுமை பின்தொடர்வதால் எதிர்வரும் நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச கட்டழகர் போட்டிகளில் பங்குபற்ற முடியாத துர்பாக்கிய நிலை ராஜகுமாரனுக்கு ஏற்பட்டுள்ளது.

சாதனையாளர்கள் வாழ்வில் வறுமையும் துன்பமும் சூழ்ந்துகொள்வது தவிர்க்க முடியாதது. அதற்கு ராஜகுமாரனும் விதிவிலக்கல்ல.

முயற்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எவரும் தொடத்துணியாத இலக்கு நோக்கி பயணிக்கும் ராஜகுமாரனின் கனவை நனவாக்க வேண்டியது எமது சமூகத்தின்  பொறுப்பல்லவா?

Sharing is caring!