சர்வதேச அரங்கிலிருந்து விடைபெறும் ஷஷிகலா சிறிவர்தன

இலங்கை மகளிர் அணியின் நட்சத்திரமான ஷஷிகலா சிறிவர்தன, வெற்றியுடன் சர்வதேச அரங்குக்கு விடை கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்களை பெற்றது.

ஷஷிகலா சிறிவர்தன 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை இலங்கை மகளிர் அணி 15.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு கடந்தது.

லீக் சுற்றில் ஏற்கனவே விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியது.

எவ்வாறாயினும் இந்தப்போட்டியில் வெற்றியீட்டியதனூடாக, ஷஷிகலா சிறிவர்தனவுக்கு இலங்கை அணி வெற்றியுடன் விடை கொடுத்தது.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் ஆயிரம் ஓட்டங்களை கடந்து பந்துவீச்சிலும் 50 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது ஆசிய வீராங்கனை என்ற சிறப்பை ஷஷிகலா சிறிவர்தன பெற்றுள்ளார்.

இதேவேளை, டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்பில் 180 புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாமிடத்துக்கு முன்னேறியது.

இந்தியாவுக்கு எதிராக இன்று நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட்களால் வெற்றியீட்டியதுடன் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்தப் போட்டி 3 நாட்களில் முடிவுக்கு வந்ததுடன் நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 132 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

டொம் லெதம் 52 ஓட்டங்களையும் டொம் புலுன்டல் 55 ஓட்டங்களையும் பெற்று நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களையும் நியூசிலாந்து 235 ஓட்டங்களையும் பெற்றன.

இந்தியா இரண்டாம் இன்னிங்ஸில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்பில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அவுஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை அணி 80 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் நீடிக்கிறது.

Sharing is caring!