சர்வதேச ஒருநாள் அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவர்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை சர்வதேச ஒருநாள் அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

சர்வதேச இருபதுக்கு 20 அணியின் தலைமைப் பொறுப்பிற்கு தசுன் ஷானக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்திற்கான 15 பேர் கொண்ட ஒரு நாள் குழாத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை வெளியிட்டது.

லஹிரு திரிமான்ன தலைமையிலான இந்தக் குழாத்தில் தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, ஓஷத பெர்னாண்டோ, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக்க, மினோத் பானுக, அஞ்சலோ பெரேரா, வனிந்து அசரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லக்சான் சந்தகேன், நுவன் பிரதீப், இசுரு உதான, கசுன் ராஜித, லஹிரு குமார ஆகியோர் இலங்கை ஒருநாள் குழாத்தில் இடம்பிடித்துள்ள ஏனைய வீரர்களாவர்.

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை சர்வதேச இருபதுக்கு 20 குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெறுவதுடன், லஹிரு திரிமான்ன பெயரிடப்பவில்லை.

பானுக்க ராஜபக்ச, லஹிரு குமார ஆகியோருக்கு இருபதுக்கு 20 குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ், திஸர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் விஜயத்திலிருந்து விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

Sharing is caring!