சாதனை படைத்த இலங்கைக் குழாம் தாயகம் திரும்பியது

தெற்காசிய விளையாட்டு விழாவில் அதீத திறமைகளை ​வெளிப்படுத்தி சாதித்த இலங்கைக் குழாம் ​நேற்றிரவு (11) நாடு திரும்பியுள்ளது.

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 568 வீர, வீராங்கனைகள் போட்டியிட்டிருந்தனர்.

மெய்வல்லுநர் போட்டிகள், கிரிக்கெட், கைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 350 வீராங்கனைகள் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர்.

தாயகம் திரும்பிய இலங்கை வீரர்களை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள், வீரர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.

தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் மூன்றாமிடத்தை அடைந்துள்ளது.

மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 15 தங்கப்பதக்கங்களை சுவீகரித்து தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக நீச்சல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 7 தங்கப்பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

மல்யுத்தம், பளுதூக்கல், வூஷோ, கடற்கரை கரப்பந்தாட்டம், கொல்ப் உள்ளிட்ட போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் தங்கப்பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற நிலையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வீரரும் வீராங்கனையும் நேற்றிரவே நாடு திரும்பியதுடன், தொடர் சிகிச்சைகளுக்காக நாரஹென்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமாஷா டி சில்வா, எம்.யூ குமார் ஆகியோரே இவ்வாறு இராணுவ வைத்தியசாலையில் சிசிக்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட வீர, வீராங்கனைகளாவர்.

Sharing is caring!