சிறந்த சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின்…..முத்தையா முரளிதரன்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்றும், தான் பேட்டிங் செய்யும் போது சேவாக்கை பார்த்து பயந்ததாகவும் இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றளவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருபவர் முத்தையா முரளிதரன். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஸ்வினை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் பேசும் போது, “குல்தீப் சிறப்பாக பந்து வீசுகிறார். ஆனால் ஆஃப் ஸ்பின்னர்கள் என்று வரும் போது அஸ்வின் தான் உலகிலேயே சிறந்தவர். வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு குல்தீப் யாதவ் சிறந்த பந்துவீச்சாளர் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகிறார். என்னைப் பொறுத்தவரை பேட்ஸ்மேனை நிலைகுலைய வைக்கும் பந்துவீச்சாளர் குல்தீப். வித்தியாசமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளுகிறார். இடதுகையில் சினாமென் பந்துவீச்சில் ஈடுபடுவது மிகவும் அரிதானது. நம் தேவைக்கு ஏற்றார்போல் பந்துவீச்சை மாற்றி பேட்ஸ்மேன்களத் திணறடிக்கலாம்.

இந்திய அணிக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து பும்ரா. பும்ரா மலிங்காவை  நினைவுபடுத்துகிறார். பும்ராவின் பந்துவீச்சில் விளையாடுவது கடினம்தான்” என்றார்.

மேலும் அவர், “நான் பந்துவீசிய காலத்தில் நான் பார்த்து அச்சப்பட்ட ஒரே பேட்ஸ்மேன் சேவாக் மட்டும்தான். எந்த பந்துவீச்சாளரின் பந்துவீச்சையும் துவம்சம் செய்யக்கூடியவர். முடிந்தவரை அவரைக் களத்தில் செட்டில் ஆகவிடாமல் பார்த்துக்கொள்வது பந்துவீச்சாளர்களுக்கு நல்லது. அதுபோலவே நானும் சேவாக்கிடம் எச்சரிக்கையுடனே பந்து வீசுவேன். நானும் அவரைப் பார்த்து பயந்தேன், அவரும் என் பந்துவீச்சைப் பார்த்து அச்சப்பட்டார். அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உச்சத்தில் இருக்கிறார். அவருக்கு நான் டெஸ்ட் போட்டியில் பந்து வீசியது இல்லை. ஆனால் ஓருநாள் போட்டியில் பந்து வீசி இருக்கிறேன். அவர் தற்போது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்” என்று முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!