சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் சமீபத்தில் தேசிய சீனியர் பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவால், பிரணாய் ஆகியோருடன் பி.வி.சிந்துவும் களமிறங்குகிறார்.

சீனாவின் புஸ்ஹோவ் நகரில் இன்று தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.4.5 கோடியாகும். இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோரும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் களமிறங்குகின்றனர். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சாய்னா, கடந்த வாரம் நாக்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் பாட்மிண்டன் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

அதேவேளையில் தேசிய சீனியர் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்றார். சாய்னா, பிரணாய் ஆகிய இருவரும் உலக பாட்மிண்டன் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் டிசம்பர் மாதம் துபையில் நடைபெறும் உலக சூப்பர் சீரிஸ் பைனலுக்கு தகுதி பெறுவதற்கு இந்தத் தொடர் உதவும்.

மதிப்புமிக்க உலக சூப்பர் சீரிஸ் தொடரில் தரவரிசையில் முதல் 8 இடங்ளை பிடிப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதனால் சீன ஓபன் பாட்மிண்டன் தொடரும், இம்மாத இறுதியில் நடைபெறும் ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரும் தரவரிசையில் முன்னேற்றம் காண்பதற்கு சாய்னா, பிரணாய் ஆகியோருக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற 27 வயதான சாய்னா, சீன ஓபன் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் விவென் ஜாங்குடன் மோதுகிறார். அதேவேளையில் பிரணாய், தகுதி சுற்றில் வெற்றி பெறும் வீரரை எதிர்கொள்ள உள்ளார். இந்த ஆண்டில் 4 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்று சாதனை படைத்த இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சீன தொடரில் கலந்துகொள்ளவில்லை.

இந்த சீசனில் 2 சூப்பர் சீரிஸ் பட்டங்களும், கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ஆயத்தமாக உள்ளார். சீன ஓபனில் அவர் தனது முதல் சுற்றில் ஜப்பானின் சயகா சடகோவை சந்திக்கிறார். சயகா சடகோ இந்த சீசனில் இந்தோனேஷிய ஒபனில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து இந்தத் தொடரில் 2 சுற்றுகளை கடக்கும் நிலையில் வலுவான போட்டியாளரான ஜப்பானின் நோஸோமி ஒகுஹராவை சந்திக்கக்கூடும். ஒகுஹரா, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் நீண்ட நேரம் சவால் கொடுத்து சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வேட்டையாடியிருந்தார்.

ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களான காஷ்யப், சவுரப் வர்மா ஆகியோரும் களமிறங்குகின்றனர். காயம் காரணமாக சாய் பிரணீத், அஜெய் ஜெயராம், சமீர் வர்மா விலகி உள்ளனர். இரட்டையர் பிரிவில் மனு அட்ரி, சுமித் ரெட்டி மற்றும் சாட்விக் சாய் ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடிகளும், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடியும் களமிறங்குகிறது.

Sharing is caring!