‘சூப்பர்–4’ சுற்றுப்போட்டியில் இந்திய அணிக்கு 253 ரன்கள் இலக்கு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ‘சூப்பர்–4’ சுற்றுப்போட்டியில் இந்திய அணிக்கு 253 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பைனலுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்ட இந்திய அணி ‘சூப்பர்–4’ சுற்றுப்போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர் கொள்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்கார் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி கேப்டனாக தோனி களமிறங்கினார். இந்திய அணியில் ரோகித், தவான், பும்ரா, புவனேஷ்வர், சகால் நீக்கப்பட்டு ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், தீபக் சகார் (அறிமுகம்), கலீல் அகமது சேர்க்கப்பட்டனர்.

ஷாஜத் சதம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷாஜத், ஜாவத் அக்மதி துவக்கம் தந்தனர். ஜடேஜா ‘சுழலில்’ ஜாவத் (5), ரஹ்மத் ஷா (3) சிக்கினர். குல்தீப் தன் பங்கிற்கு ஹஸ்மதுல்லா, கேப்டன் அஸ்காரை டக் அவுட்டாக்கினார். அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தபோதும், ஷாஜத் அதிரடியாக ரன் சேர்த்தார். இவர் ஜடேஜா பந்துவீச்சில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். தொடர்ந்து அசத்திய ஷாஜத் சதம் கடந்தார். சகார் பந்தில் குல்பதீன் (15) ஆட்டமிழந்தார். நெருக்கடி தந்த ஷாஜத் 124 ரன்களில் அவுட்டானார். நபி (64) அரை சதம் எட்டினார். ஜடேஜா பந்தில் நஜிபுல்லா (20) சிக்கினார். முடிவில், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் (12), ஆலம் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

200

இப்போட்டியில் ரோகித்திற்குப்பதில் தோனி அணியை வழிநடத்துகிறார். இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் 200வது போட்டிக்கு தோனி கேப்டனாக களமிறங்கினார். இந்திய அணிக்கு 696 நாட்களுக்குப்பின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றுள்ளார். சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (230 போட்டி), நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங்கிற்குப்பின் (218) அதிக ஒரு நாள் போட்டியில் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமை பெற்றார்.

Sharing is caring!