சென்னை வந்தடைந்த தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

38 வயதான டோனி, மார்ச் 19ம் திகதி வரை அவருடைய சக விளையாட்டு வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபடுவார்.

மார்ச் 29ம் திகதி ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் குறுகிய இடைவெளி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கடைசியாக விளையாடினார்.

அதன்பிறகு தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த டோனி, ஜனவரி மாதத்தில் பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வந்திருக்கும் அவரது புகைப்படம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

Sharing is caring!