சொதப்பிய சவுதி… ரணகள ரஷ்யா

“நாங்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லப் போவதில்லை. கோப்பையை வெல்லத் துடிக்கும் ஒவ்வொரு அணியிடமும் அவர்களின் திட்டத்தைக் கேளுங்கள். அவர்களின் முதல் குறி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அதேதான் எங்களின் லட்சியமும். எங்களைப் பார்த்து எங்கள் மக்கள் பெருமைப்படவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், எல்லோரும் எங்களின் முந்தைய ஆட்டங்களைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஃபிரான்ஸ் அணி அமெரிக்காவுடன் டிரா செய்ததற்கு ‘கடுமையான பயிற்சியினால் வீரர்கள் சோர்வாக இருக்கிறார்கள்’ என்று அவர்கள் பயிற்சியாளர் காரணம் சொன்னார். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். அதே காரணத்தை நாங்கள் கூறியபோது, எல்லோரும் சிரிக்கின்றனர்…” உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இப்படி மனம் நொந்து பேசியிருந்தார் ரஷ்ய வீரர் ஆர்டம் சையுபா.

அந்த வார்த்தைகளில் அவ்வளவு வலி. ரஷ்ய மக்களுக்கு தங்கள் அணியின் மீதான நம்பிக்கை முற்றிலும் குறைந்திருந்தது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகளில் ஃபிஃபா ரேங்கிங்கில் கடைசி இடத்தில் இருப்பது அவர்கள்தான். அதைவிட, கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றி கூட இல்லை. அதனால் கடந்த சில வாரங்களாகவே ரஷ்ய அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. அதன் விளைவுகள் கடுமையாகவே, கடும் விரக்தியுடன் அப்படிப் பேசியிருந்தார் சையுபா. அவரது பேட்டி, ரஷ்ய மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கள் அணியை முதல் போட்டியில் விமர்சனங்களை மறந்து ஆதரித்தார்கள்.

Sharing is caring!