சொந்த மண்ணில் பாகிஸ்தானை பந்தாடி பெரு வெற்றியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி வீரர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து இருபதுக்கு இருபது போட்டியில் சர்வதேச சாதனை படைத்த இலங்கை கிரிக்கட் அணியினர் இன்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இலங்கை அணிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.மாலை அணிவித்து அவர்கள் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ள விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச இருபது கிரிகெட் தரவரிசையில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக (3-0) வெற்றிகொண்டு தங்களது அற்புத ஆற்றல்களால் தேசத்துக்கு புகழும் பெருமையும் ஈட்டிக்கொடுத்த இளம் இலங்கை கிரிகெட் வீரர்களுக்கு மொத்தமாக 145,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிகெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். இதில், இருபது 20 கிரிகெட்டில் ஈட்டிய ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 15,000 அமெரிக்க டொலர்கள் ஊக்குவிப்புத் தொகை அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெகுமானத்தை வென்ற இருபது 20 கிரிகெட் வீரர்களில் பலர் இலங்கை அணியில் தமது இருப்பை உறுதிசெய்வதற்கான வாயிலைத் திறந்துகொண்டதுடன் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாக்கிஸ்தான் செல்ல மறுத்த பத்து வீரர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.சர்வதேச இருபது 20 கிரிகெட் தரவரிசையில் முதல் நிலை அணியும் பலம்வாய்ந்த அணியுமான பாகிஸ்தானை முழுமையாக வெற்றிகொண்ட தசுன் ஷானக்க தலைமையிலான அணியில் இடம்பெற்று அபரிமிதமாகப் பிரகாசித்த வீரர்களைக் கொண்டு புறம்பான இருபது 20 இலங்கை அணியை அமைக்கும் திட்டம் உள்ளதா என தெரிவுக் குழுத் தலைவர் அஷன்த டி மெல்லிடம் பிரத்தியேகமாகக் கேட்டபோது, அது குறித்து ஆழமாக சிந்தித்து வருகின்றோம் எனவும் பதிலளித்தார்.

பாக்கிஸ்தானிலிருந்து இலங்கை அணி நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா கிரிகெட் தலைமைய கேட்போர்கூடத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னரே எமது பிரத்தியேகக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.”பாக்கிஸ்தானில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆறு பேருடன் இன்னும் சில வீரர்கள் எம்மைப் பெரிதும் கவர்ந்துள்ளனர். அவர்களில் சிலர் சர்வதேச அரங்கில் விளையாடுவதை நான் முதல் தடவையாக பார்வையிட்டேன். இத்தகைய ஆற்றல்களும் அர்ப்பணிப்புத் தன்மை நிறைந்தவர்களும் இதற்கு முன்னர் இலங்கை அணிக்குள் ஈர்க்கப்படாதது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. நான் கடந்த ஒரு வருடமாகத்தான் தெரிவுக் குழுவில் இடம்பெறுகின்றேன்.
சிரேஷ்ட வீரர்கள் பத்து பேர் பாக்கிஸ்தான் செல்ல மறுத்ததாலேயே இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பற்றிப்பிடித்துக்கொண்டார்கள். அவுஸ்திரேலியாவுக்கான இருபது 20 கிரிகெட் சுற்றுப் பயணத்துக்கு இந்த வீரர்களுடன் மூன்று சிரேஷ்ட வீரர்களை இணைக்க எண்ணியுள்ளோம். மேலும் இருபது 20 வகை கிரிகெட்டுக்கு என தனியான ஓர் அணியை உருவாக்குவது குறித்தும் ஆழமாக சிந்தித்து வருகின்றோம்” என அஷன்த டி மெல் தெரிவித்தார்.

அதற்கு முன்பதாக ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அஷன்த டி மெல், “சிரேஷ்ட வீரர்கள் பாக்கிஸ்தான் செல்ல மறுத்தபோது புதியவர்கள் பிரகாசித்தால் நீங்கள் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என அவர்களிடம் கூறியிருந்தேன். அந்தப் புதியவர்களும் அற்புதமாக விளையாடிய தத்தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். அதன் மூலம் எம்மிடம் சிறந்த வீரர்கள் பலர் இருப்பது உணர்த்தப்பட்டதுடன் அவர்களிலிருந்து தேசிய அணியைத் தெரிவு செய்யும் நிலை இப்போது தோன்றியுள்ளது. எமது அணியில் பலம் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. ஐந்து மாற்றங்களுடன் கடைசி இருபது 20 கிரிகெட் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் அது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் தொடர்ந்து வெற்றிகள் ஈட்டுவதைப் பழக்கமாக்கிக்கொண்டால் அவுஸ்திரேலியாவில் நிச்சயமாகத் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றார்.இதற்கு முன்னர் உரிய வீரர்களைத் தெரிவு செய்வதில் சிக்கலை எதிர்கொண்டதாகவும் தற்போது அந் நிலை மாறியுள்ளது எனவும் அஷன்த டி மெல் தெரிவித்தார்.

“முன்னர் உரிய வீரர்களைத் தெரிவு செய்வதில் சிக்கலை எதிர்கொண்டோம். ஆனால் இப்போது துடுப்பாட்ட வரிசையில் 6 இடங்களுக்கு போட்டித்தன்மை தோன்றியுள்ளது. இளையோருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் பற்றிப் பிடித்துக்கொண்டு பிரகாசித்ததன் மூலம் அவர்கள்பால் நான் ஈர்க்கப்பட்டேன். பானுக்க ராஜபக்ஷ, மினோத் பானுக்க, ஓஷாத பெர்னாண்டோ ஆகியோர் உடலாலும் உள்ளத்தாலும் அர்ப்பணிப்புடன் விளையாடினார். மற்றவர்களும் அப்படித்தான்.இவர்கள் எல்லோரும் உள்ளூரில் விளையாடுவதைப் பார்த்துள்ளோம். ஆனால், சர்வதேச இருபது 20 அரங்கில் முதல் நிலை அணிக்கு எதிராக அதுவும் அதிவேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணிக்கு எதிராக அவர்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திய விதம் பெரும் பாராட்டுக்குரியது. மேலும் 30, 40 பந்துகளில் ஓட்டங்களைப் பெறமுடியாமல் (டொட் போல்ஸ்) போனாலும் சிக்சர்கள், பவுண்ட்றிகளை விளாசி அவர்கள் அதனை நிவர்த்தி செய்துகொள்கின்றனர். அதுதான் இருபது 20 கிரிக்கெட் அவசியமானதாகும். அத்துடன் பானுக்க ராஜபக்ஷ துடுப்பெடுத்தாடிய விதம் மஹேல ஜயவர்தனவின் துடுப்பாட்டத்தை நினைவுக்கு கொண்டுவந்தது. இந்த சுற்றுப் பயணத்தில் அதிகளவில் முன்னேற்றதை வெளிப்படுத்தியவர் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க ஆவார். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் மனஉறுதியுடன் விளையாடியமை அவரது மகத்தான ஆற்றலை வெளிக்காட்டியது. எனவே அவுஸ்திரேலிய கிரிகெட் விஜயத்துக்கான குழாத்தை தெரிவு செய்யும்போது இந்த வீரர்களின் ஆற்றல்களை கவனத்தில் கொள்வோம்” என்றார் அஷன்த டி மெல்.

Sharing is caring!