டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோஷியா

பெனால்டி ஷூட்-அவுட்டில் டென்மார்க்கை வீழ்த்தி குரோஷிய அணி, ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி காலிறுதிக்கு முன்னேறியது.
ரஷ்யாவின் நோவ்கோராட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வலுவான குரோஷிய அணியை டென்மார்க் அணி எதிர்கொண்டது. போட்டி துவங்கிய 58வது வினாடியில் டென்மார்க் அணியின் முன்கள வீரர் மத்தியாஸ் ஜோர்ஜென்சன், அட்டகாசமாக கோல் அடித்து, குரோஷியாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

டென்மார்க் வீரர் ஜோனாஸ் நட்செனின் லாங்-த்ரோவை தாமஸ் டெலனே எடுத்து, மத்தியாசிடம் பாஸ் செய்ய, அவர் அதை கோலாக்கினார்.

இருப்பினும் டென்மார்க் அணியின் மகிழ்ச்சி அடுத்த 3 நிமிடம் கூட நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ மாண்ட்சுகிக், சக வீரர் ஆண்ட்ரியாஸ் கிரிஸ்டியன் கடத்தி தந்த பந்தை, அற்புதமான ஷாட்டின் மூலம் கோலாக மாற்றினார்.

இதனால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலைக்கு வந்தன.
அதன் பின்னர் இரு அணிகளுமே தற்காப்பு ஆட்டத்தை கடைபிடிக்க, நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. அற்புதமாக கிடைத்த இரண்டு வாய்ப்புகளை குரோஷிய வீரர்கள் வீணடித்தனர். எக்ஸ்ட்ரா-டைமில் கிடைத்த அற்புதமான பெனால்டி கிக்கையும், குரோஷியாவின் முன்கள வீரர் லூகா மோட்ரிக் வீணடித்தார்.

இதையடுத்து பெனால்டி ஷூட்-அவுட் நிர்ணயிக்கப்பட்டது. குரோஷிய அணி வீரர்கள் லூகா மோட்ரிக், ஆண்ட்ரெஜ் கிராமாரிக், இவான் ராகிடிக் ஆகியோர் பெனால்டி ஷூட்-அவுட்டில் அபாரமாக கோல் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

குரோஷியாவின் கோல் கீப்பர் டேனியல் சுபாசிக், டென்மார்க் வீரர்கள் கிரிஸ்டியன் எரிக்சன், நிகோலாய் மற்றும் லாசே கோன் அடித்த பெனால்டி ஷாட்களை தடுத்து, அணியின் வெற்றிக்கு காரணமானார்.

இறுதியில் குரோஷியா 3-2 என்ற கணக்கில் பெனால்டி ஷூட்-அவுட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. 1998ம் ஆண்டுக்கு பின்னர் குரோஷிய அணி இப்போதுதான் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அணியின் இந்த வெற்றியை குரோஷியாவில் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Sharing is caring!