டெஸ்ட் தரவரிசையில் கோலி முதலிடம்

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடம் பிடித்தார்.

இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்க்பேஸ்டன் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி தோல்வியுற்றது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் நல்ல சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியைக் கட்டுப்படுத்திய போதும், பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது.

2 இன்னிங்ஸிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்த போது தனி ஆளாய் நின்று  அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்றார் கோலி.அவர் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 200 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இன்று வெளியான டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். 200 ரன்கள் அடித்ததன் மூலம் 31 புள்ளிகளை சேர்த்துள்ள கோலி, முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த தரவரிசையில் முதல் இடத்தை ஸ்டீவ் ஸ்மித் 32 மாதங்களாக தக்கவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கவுதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக் மற்றும் திலிப் வெங்சர்கார் ஆகியோர் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

Sharing is caring!