டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இன்று நிறைவுக்கு வந்த மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இது சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக அடையும் 11ஆவது டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 497 ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.

முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இதனையடுத்து, 335 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையிலும் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்திலும் பலே ஒன்னில் பதிலளித்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா நேற்றைய மூன்றாம் நாளில் முதல் 8 விக்கெட்களையும் இழந்தது.

8 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களுடன் களமிறங்கிய தென்னாபிரிக்காவால் இன்றைய நான்காம் நாளில் மேலதிகமாக ஓர் ஓட்டத்தை மாத்திரமே பெற முடிந்தது.

அறிமுக வீரரான ஷெபாஸ் நதீமின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தப்பட, தென்னாபிரிக்காவின் இரண்டாம் இன்னிங்ஸ் 133 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டியபோதே , சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றி, இந்தியா உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரொன்றை முழுமையாகக் கைப்பற்றிய முதல் இந்திய அணித் தலைவராகவும் விராட் ​கோஹ்லி இதன்போது பதிவானார்.

ஒரு இரட்டைச் சதத்துடன் 529 ஓட்டங்களைக் குவித்த ரோஹித் சர்மா போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

இந்தத் தொடர் வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 240 புள்ளிகளை இந்தியா சுவீகரித்துள்ளது.

Sharing is caring!