தனது அதீத திறமையினால் மிகக் குறைந்த வயதில் தேசிய குத்துச் சண்டை அணிக்கு தெரிவாகி சாதனை படைத்த தமிழ் மாணவன்..!!

மிகக்குறைந்த வயதில் தேசிய குத்துச்சண்டை அணிக்கு வடக்கு மாகாணத்திலிருந்து மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6-ல் கல்வி கற்றுவரும் ஆர்.கே.கெவின் (வயது 11) என்ற மாணவனே தேசிய ‘கிக் பாக்சிங்’ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கெடுத்துவரும் குறித்த மாணவன் 2019 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை பெற்று வவுனியாவிற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அந்தவகையில் பிரஞ்சு சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவரும், சர்வதேச கிக் பாக்சிங் பயிற்றுவிப்பாளருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 21ம் திகதி பாகிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதான அரங்கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற கெவின் தெரிவாகியுள்ளார்.வடக்கு மாகாண குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமாரின் பயிற்சியின் மூலம் தேசிய ரீதியில் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவனை பலரும் பாராட்டி கௌரவித்திருந்த நிலையில் குறித்த மாணவன் இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் இடம்பிடித்து வடக்கு மாகாணத்திற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Sharing is caring!