தனது சிறப்பான ஆற்றலினால் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த தமிழன்..!!

நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸல்லாவ எமஸ்டன் தோட்டத்தை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் தற்போது மலேசியா கூச்சிங் சேவாக் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் கலந்துக் கொண்டு வேகநடை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கம் பெற்று இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்று வரும் 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 3000 க்கு மேற்பட்ட வீர வீரங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். இதன் மத்தியிலேயே மணிவேல் சத்தியசீலன் இந்த சாதனையை தனதாக்கி கொண்டுள்ளார்.

அண்மைகாலமாக மலையகத்தில் இவ்வாறு பல இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் இலங்கைக்கும் மலையகத்திற்கு சர்வதேச ரீதியல் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்து வருகின்றனர்.

அவற்றில் ஹட்டனை சேர்ந்த குமார் சண்முகேஷ்வரன், கொத்மலை லபுக்கலை தோட்டம் மாதவன் ராஜ்குமார் ஆகியோரை குறிப்பிட முடியும். இதே 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் என்ற வீரரரும் கலந்துக் கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிவேல் சத்தியசீலன் சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் உடையவர். 2017 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 20 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் கலந்து வேகநடை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். அதேபோல் ஏனைய மூன்று போட்டிகளில் கலந்து வெள்ளிப் பதக்கங்களும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இவரின் அம்மா வி.விஜயலட்சுமி தந்தை எம்.மணிவேல் தோட்ட தொழிலாளிகள். தற்போது ஒய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரின் மனைவி திருமதி ச.தேவபிரியா மலையக மக்கள் முன்னணியின் வலப்பனை பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றார்.மணிவேல் சத்தியசீலன் சுய தொழிலாக மரக்கறி செய்கையிலும் மரக்கறி விற்பனையிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.இவரின் இந்த இலக்கை அடைவதற்கு இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.இவரின் இந்த பயணத்திற்கு பல்வேறுப் பட்டவர்களிடம் உதவிகள் கோரியும் கிடைக்கவில்லை.இருந்தும் எடுத்த முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் தனது விவசாயத்தின் மூலம் கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேமித்தும் சிலரிடன் கடன் பெற்றும் வட்டிக்கு பணம் பெற்றும் பெரும் செலவில் தனது சொந்த பணத்தில் மலேசியா சென்று இந்த வெற்றியை பெற்று உள்ளார்.

இவரின் இந்த வெற்றி இவரின் கனவின் நனவாக இருந்தாலும் மலையகத்தை பொறுத்த வரையில் சாதனையே. மலையத்தில் அனைத்து துறைகளிலும் திறமை உள்ளவர்கள் பலர் இருக்கின்றனர்.அதனை வெளிக்காட்ட வறுமை ஒரு காரணமாக இருக்கின்றது.இவ்வாறான நிலையில் அண்மை காலமாக இவர் போன்றவர்களுக்கு உதவி கரம் நீட்டி உலகளாவிய ரீதியில் மிளர செய்வதற்கு மலையக சொந்தங்கள் பலர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். அதன் பயனையும் பெற்று உள்ளனர். இந்த கரங்கள் இவரையும் எதிர்காலத்தில் அனைக்க வேண்டும்.உண்மையாகவே இவரின் திறமையை 2017 ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 20 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் கலந்து வேகநடை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போதே உலகறிய செய்து இருக்க வேண்டும்.இவரும் பதக்கம் வென்று தனக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று ஒழிந்து இருக்கவில்லை தொடர் முயற்சியில் 2019 ஆம் ஆண்டு 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனையை நிலைநாட்டி உள்ளார்.

Sharing is caring!