தனி ஒருவராக பிரகாசித்த தனஞ்சய டி சில்வா

டொம் லெதமின் அபார சதத்தின் மூலம் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து சவாலான நிலைக்கு உயர்ந்துள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் இந்தப்போட்டி நடைபெறுகிறது.

6 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

விக்கெட்கள் வீழ்த்தப்பட்டாலும் தனி ஒருவராக பிரகாசித்த தனஞ்சய டி சில்வா சதம் கடந்த நிலையில், 109 ஓட்டங்களைப் பெற்றார்.

டெஸ்ட் அரங்கில் அவர் பதிவு செய்யும் ஐந்தாவது சதம் இதுவாகும். இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 244 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

டிம் சௌதி 4 விக்கெட்களையும் ட்ரன்ட்போல்ட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து ஓர் ஓட்டத்திற்கு முதல் விக்கெட்டை இழந்தது. அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதல் போட்டியைப் போலவே சோபிக்கத் தவறினார்.

அவர் முதல் இன்னிங்ஸில் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் டொம் லெதம் சதம் கடந்த நிலையில் 111 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டில்ருவன் பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Sharing is caring!