தம்பி பும்ரா… என்னப்பா…இப்படி பண்ணிட்டியேப்பா!

“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்பதற்கு தற்சமயம் ஆகச்சிறந்த உதாரணம் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விஜய் சங்கர் தான். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனாலும் காயம் காரணமாக, உலகக்கோப்பை போட்டியிலிருந்து விலகுவதாக ஷிகர் தவான் அறிவித்த பிறகே, விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டமே, விஜய் சங்கர் களமிறங்கிய முதல் போட்டியாக அமைந்தது. அந்த போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனான போட்டியிலும் அவர் ஒன்றும் மோசமாக ஆடவில்லை. இவ்விரு போட்டிகளிலும் பந்துவீச, விஜய் சங்கருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது கேப்டன் கோலிக்கு தான் வெளிச்சம்.

சரி போகட்டும் என பார்த்தால், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை களமிறக்கி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் கோலி. இங்கிலாந்துடனான ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த வந்த நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறாததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்துக்கு  எதிரான ஆட்டத்தை சிறப்பாக எதிர்கொள்ள, இந்திய அணி வீரர்கள்  தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது, இந்திய அணியின் இளம் மிரட்டல் பௌலர் பும்ரா யார்க்கராக வீசிய பந்து, விஜய் சங்கரின் கால் விரலை பதம் பார்த்துள்ளது. அதனால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக வேண்டியதாகியுள்ளது என  தெரிய வந்துள்ளது.

தம்பி பும்ரா… எல்லா மேட்சுலேயும் சூப்பரா பௌலிங் போட்டு, எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுவதெல்லாம் ஓகே தான்… ஆனா, பிராக்டீஸ் என்ற பேர்ல டீமேட் ஒருவரையே இப்படி இன்சுரி ஆக்கிட்டியேப்பான்னு… விஜய் சங்கரின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Sharing is caring!