தென்னாபிரிக்கா அணியை டெஸ்ட் தொடரில் வைட் வோஷ் செய்து இந்தியா அசத்தல்!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை, இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

அத்தோடு, ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக வழங்கப்படும் 120 புள்ளிகளையும் இந்தியா அணி பெற்றுள்ளது.
…………

ராஞ்சி மைதானத்தில் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் முதலில் களமிறங்கிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 497 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஹித் சர்மா 212 ஓட்டங்களும், அஜிங்கியா ரஹானே 115 ஓட்டங்களும், ரவீந்திர ஜடேஜா 51 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ஜோர்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளையும், கார்கிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், என்ரிச் நோர்ட்ஜே மற்றும் ஜோர்ஜ் பெய்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 162 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது தென்னாபிரிக்கா அணி சார்பில், சுபைர் ஹம்ஸா 62 ஓட்டங்களையும், ஜோர்ஜ் லிண்டே 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி, ஷாபாஸ் நதீம் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 335 ஓட்டங்கள் பின்னிலைப் பெற்ற தென்னாபிரிக்கா அணியை, இந்தியா அணி, போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதற்கமைய போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 133 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி, இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக தெனியூஸ் டி பிரையன் 30 ஓட்டங்களையும், ஜோர்ஜ் லிண்டே 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியா அணியின் பந்து வீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ஷாபாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்த தென்னாபிரிக்கா அணி, முதலில் நடைபெற்ற ரி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.

தற்போது டெஸ்ட் தொடரையும் 0-3 என இழந்து ஒரு தொடரைக் கூட கைப்பற்றாமல், ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.

இந்த தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஜனவரி மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!