தென்னாபிரிக்கா முன்னிலை….இலங்கைக்கு எதிரான டெஸ்ட்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 138 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா பெற்ற 235 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய இலங்கை 191 ஓட்டங்களைப் பெற்றது.

டேர்பனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்களுடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இன்றைய தினம் முதல் விக்கெட்டாக ஓஷத பெர்னாண்டோ 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களைப் பெற்றதுடன், குசல் மென்டிஸ், நிரோஷன் திக்வெல்ல உள்ளிட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி ஒரு கட்டத்தில் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்த போதிலும், குசல் ஜனித் பெரேரா 51 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுப்படுத்தினார்.

பின்வரிசையில் லசித் அம்புல்தெனிய 63 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்று கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் டேல் ஸ்டேன் 4 விக்கெட்களையும், வேர்னன் பிலிந்தர், கெகிஷோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Sharing is caring!