தென் ஆபிரிக்கா வெற்றி…இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி

இலங்கைக்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி ​5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 4 – 0 என தென் ஆபிரிக்கா முன்னிலை வகிக்கிறது.

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணித்தலைவர் பெப் டு பிலெசி களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

உபுல் தரங்க, பிரியமால் பெரேரா ஆகியோர் இலங்கை அணியில் இணைக்கப்பட்டு நிரோஷன் திக்வெல்ல, உபாதைக்குள்ளான குசல் ஜனித் பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

இளம் வீரரான பியமால் பெரேரா சர்வதேச ஒருநாள் அறிமுகம் பெற்றார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கி விக்கெட்களை இழந்தது.

9ஆம் விக்கெட்டுக்காக களமிறங்கிய இசுரு உதான சிறப்பாக துடுப்பெடுத்தாடி தனது முதல் அரைச்சதத்தை அடைந்தார்.

57 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 78 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி 39.2 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பந்துவீச்சில் நோர்ட்ஜி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தேசியமட்ட கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி தென் ஆபிரிக்க விஜயத்தில் இணைந்த ஏஞ்சலோ பெரேராவுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இரண்டு இரட்டை சதங்களை விளாசி தென் ஆபிரிக்க விஜயத்தில் இணைந்த அவருக்கு ஒருநாள் தொடரில் 4 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காதது வியப்புக்குறிய விடயமாகும்.

கிரிக்கெட் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஏஞ்சலோ பெரேராவின் விடயத்தில் இவ்வாறு செயற்படுவதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

முதல்தர கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராகவும் உலகின் இரண்டாமவராகவும் சாதனை ஏட்டில் பதிவான ஏஞ்சலோ பெரேராவை 4 போட்டிகள் முடியும் வரை அதிகாரிகள் மறந்ததேன்?

வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 190 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி 21 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

எனினும், குவின்டன் டி கொக் 51 ஓட்டங்களையும் அணித்தலைவர் பெப் டு பிலெசி 43 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஜே பி டுமினி 31 ஓட்டங்களையும் டேவிட் மிலர் 25 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள தென் ஆபிரிக்க அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி அடைந்தது.

Sharing is caring!