தெரேசா மேயை சந்தித்தனர் இங்கிலாந்து வீரர்கள்

உலக சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீரர்கள் அந்நாட்டு பிரதமர் தெரேசா மேயை சந்தித்துள்ளனர்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தப் போட்டியும் சுப்பர் ஓவரும் சமநிலையடைந்த நிலையில் பவுன்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன்மூலம் கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்தின் 44 வருட கனவு நனவாகியது.

இதனையடுத்து உலக சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீரர்களை அந்நாட்டு பிரதமர் தெரேசா மே சந்தித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்து உலகக்கிண்ண வெற்றியை பிரதமர் தெரேசா மே கொண்டாடியுள்ளார்.

இங்கிலாந்து வீரர்கள் வரலாற்றை புதுப்பித்துள்ளதாக இதன்போது தெரேசா மே தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் கிரிக்கெட்டை நேசிக்கும் தரப்பினரின் எதிர்ப்பார்ப்பை இங்கிலாந்து வீரர்கள் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற்ற அனைத்து வீரர்களையும் உள்ளடக்கிய வகையிலான கையொப்பத்துடன் நினைவு பரிசொன்றையும் தெரேசா மேயிற்கு ஒய்ன் மோர்கன் தலைமையிலான வீரர்கள் இதன்போது பரிசளித்துள்ளனர்.

இதனிடையே, உலகக்கிண்ண சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீரர்களுக்கு பிரித்தானியாவின் இரண்டாவது மகாராணியான எலிசெபெத் வாழ்த்து கூறியுள்ளார்.

மகாராணி இரண்டாம் எலிசெபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரால் வழங்கப்பட்ட வாழ்த்து அட்டையை இங்கிலாந்தின் ரோயல் தபால் சேவை வீரர்களுக்கு பரிசளித்துள்ளது.

அத்துடன், இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு இங்கிலாந்தில் அமைந்துள்ள 15 தபால் நிலையங்களின் அஞ்சல் பெட்டிகளில் கிரிக்கெட் பந்தையும் விக்கெட்களையும் தங்க முழாமில் அலங்கரிப்பதற்கும் தீர்மானிக்கட்டுள்ளது.

இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் மற்றும் 2017 ஆம் ஆண்டு மகளிர் உலகக்கிண்ணத்தை இங்கிலாந்துக்கு வென்று கொடுத்த ஹீதர் நைட் ஆகியோரின் தனித்துவத்தை உலகறியச் செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்த ஓவியங்கள் 3 மாதங்களுக்கு நீடிக்கும் வகையில் அலங்கரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில், உலக சம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களை சந்தித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

Sharing is caring!