தொடரை கைப்பற்றியது இந்தியா… கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி

வெலிங்டன்:
அசத்தல் வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்றி கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசத்திய இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 4-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வெலிங்டனில் நடந்தது.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. தினேஷ் கார்த்தி, கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பதிலாக தோனி, முகமது ஷமி, விஜய் ஷங்கர் ஆகியோர் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (2), ஷிகர் தவான் (6), சுப்மன் கில் (7), தோனி (1) ஏமாற்றினர். விஜய் ஷங்கர் (45) ‘ரன்-அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடு (90) எடுத்தார்.

கேதர் ஜாதவ் (34), ஹர்திக் பாண்ட்யா (45) ஓரளவு கைகொடுக்க, இந்திய அணி 49.5 ஓவரில் 252 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்ரி 4, பவுல்ட் 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு நிக்கோல்ஸ் (8) ஏமாற்றினார். முன்ரோ (24), கேப்டன் வில்லியம்சன் (39) ஆறுதல் தந்தனர். ராஸ் டெய்லர் (1) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய டாம் லதாம் (37), ஜேம்ஸ் நீஷம் (44) ஓரளவு கைகொடுத்தனர். கிராண்ட்ஹோம் (11), சான்ட்னர் (22), ஆஸ்லே (10) சோபிக்கவில்லை.

44.1 ஓவரில் 217 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டாகி’ நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இந்திய அணி வீரர் சகால் 3 விக்கெட் கைப்பற்றினார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!