தொடர் வெற்றி குறித்து மகிழ்ச்சி – அஷந்த டி மெல்

பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி அடைந்துள்ள தொடர் வெற்றி குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவுக்குழு தலைவரான அஷந்த டி மெல் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அஷந்த டி மெல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழு என்ற ரீதியில் நாம் மகிழ்ச்சியடையும் காரணமாக இந்தத் தொடரின் வெற்றி அமைந்துள்ளது. இளம் அணியொன்று இவ்வாறான தொடர் வெற்றியொன்றை ஈட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இருபதுக்கு 20 தொடரில் இலங்கை அணியை லசித் மாலிங்க வழிநடத்துவார் என எதிர்பார்க்கின்றேன். அதற்கு மேலதிகமாக மேலும் 3 வீரர்கள் அணியில் இடம்பெறலாம். நிச்சயமாக லசித் மாலிங்கவுடன் இன்னும் 2 அல்லது 3 வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள். அவுஸ்திரேலிய தொடருக்கு இந்த போட்டிகளானவை சிறந்த பயிற்சியாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியதன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளோம். உலகக்கிண்ண இருபதுக்கு20 தொடருக்கு முன்னர் 16 இருபதுக்கு 20 போட்டிகளில் நாம் விளையாடவுள்ளோம். 20 – 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் தகுதிச்சுற்றில் விளையாடவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் இந்தப் போட்டிகளினூடாக சிறந்த குழாமொன்றை கட்டமைக்க முடியும். தற்போது விளையாடுவது போல விளையாடும் பட்சத்தில் உலகக்கிண்ண போட்டிகளில் வெற்றியீட்ட முடியும்

என இலங்கை அணியின் தெரிவுக்குழு தலைவரான அஷந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

ஒன்றாக விளையாடிய வீரர்களே எம்முடன் இருக்கின்றனர். எனவே அவர்களுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானங்களை எடுக்க முடியும். இளம் வீரர்களாக நாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து போட்டியை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது தொடர்பிலேயே சிந்திக்கின்றோம். அவ்வாறான விடயங்களை அதிகளவு திட்டமிட்டு செய்தோம். வெற்றியீட்ட முடியாமல் போனாலும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடினோம். இருபதுக்கு 20 தொடரில் எமது தேசத்துக்காக எம்மால் முடிந்ததை செய்திருக்கிறோம்

என இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!