நழுவவிட்ட ஆர்சனல் … செல்சி போராடி வெற்றி!

லண்டன் நகரை சேர்ந்த பிரீமியர் லீகின் நட்சத்திர க்ளப் அணிகள் செல்சி மற்றும் ஆர்சனல் அணிகள் மோதிய போட்டியில், செல்சி 3-2 என போராடி வென்றது.

புதிய பயிற்சியாளர்களை கொண்டுள்ள பிரபல லண்டன் அணிகள் செல்சி மற்றும் ஆர்சனல் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மோதின. இரு பயிற்சியாளர்களும் தங்களது புதிய யுக்தியை எப்படி கையாள போகிறார்கள் என சரியாக தெரியாததால், போட்டி சற்று தொய்வயடைந்தது.

தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து அதிரடியாகவும், ரசிகர்களை கவருமாறும் அட்டாக்கிங் புட்பால் ஏற்பாடு செய்ய முனைப்பாக இருந்தனர். லண்டன் ஸ்டாம்ஃபர்டு மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

போட்டி துவங்கி 9வது நிமிடத்தில் செல்சியின் பெட்ரோ கோல் அடித்தார். புதிதாக வந்துள்ள ஜோர்கினோ கொடுத்த சூப்பர் பாஸை, ஹசார்டு பெற்று, அதை  பெட்ரோவிடம் வழங்க, அவர் கோல் அடித்தார். விடாமல் அட்டாக் செய்தது செல்சி. அதன் பயனாக 20வது நிமிடத்தில் செல்சியின் மொராட்டா கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார்.

செல்சி இரண்டு கோல்கள் அடித்ததை தொடர்ந்து, ஆர்சனல் பதிலுக்கு அட்டாக் செய்து பல வாய்ப்புகளை உருவாக்கியது. முக்கியமாக ஆபமயாங் மற்றும் மிக்கடாரியன் எளிதான வாய்ப்புகளை மிஸ் செய்தனர். ஒரு வழியாக 37 வது நிமிடத்தில் ஆர்சனலின் மிக்கடாரியன் கோல் அடித்தார். அடுத்த சில நிமிடங்களில், ஆர்சனல் வீரர் இவோபி கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

முதல் பாதி 2-2 என முடிந்தது. இரண்டாவது பாதியில் நீண்ட நேரம் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தன. சில வாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், முதல் பாதியில் இருந்த வேகம் இரு அணிகளிடமும் இல்லை. 81வது நிமிடத்தில், செல்சியின் மார்கோஸ் அலோன்சோ கோல் அடித்து செல்சியின் வெற்றியை உறுதி செய்தார். 3-2 என வெற்றி பெற்றுள்ளது செல்சி. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் மீண்டும் முதலிடத்தை செல்சி பிடித்துள்ளது.அதற்கு நேர் மாறாக, இரண்டு போட்டிகளிலும் ஆர்சனல் தோற்றுள்ளதால், தற்போது 17வது இடித்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Sharing is caring!