நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி இன்று தடை!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி இன்று வித்தியாசமான காரணத்திற்காக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

கொரோனா காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.

இன்னொரு பக்கம் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரும் நடந்து வருகிறது.

முதல் மற்றும் இரண்டாவது டி 20 போட்டிகளில் நியூசிலாந்து வென்று இருந்த நிலையில் இன்று மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த டி 20 போட்டி, பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு அதிக சூரிய ஒளி காரணமாக கூறப்பட்டது.

நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த போது சூரிய ஒளி சுட்டு எரித்தது. வெளிச்சம் அதிகமாக இருந்ததால் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் பந்தை பார்க்க முடியாமல் திணறினர்.

அதேபோல் களத்தடுப்பிலும் பந்தை பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். இதனால் மைதானத்தில் இரண்டு அணி வீரர்களும் திணறினர்.

இதையடுத்து அதிக சூரிய ஒளி காரணமாக 11.4 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. பின் சூரிய வெளிச்சம் குறைந்ததும் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

பொதுவாக மழை காரணமாக போட்டி தடைபடும். ஆனால் நியூசிலாந்து நேப்பியர் மைதானத்தில் மட்டுமே வெயில் காரணமாக போட்டிகள் தடைபடுகிறது.

கடந்த வருடமும் இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டி வெயில் காரணமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!