நியூசிலாந்து 423 ஓட்டங்களால் அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 423 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

அத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் 1 க்கு பூச்சியம் என நியூசிலாந்து வசமானது.

க்ரைஸ் சேர்ச்சில் நடைபெற்ற போட்டியில் இன்றைய ஐந்தாம் நாளில் இலங்கை அணியின் வெற்றிக்காக 429 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் கைவசம் 4 விக்கெட்டுக்கள் எஞ்சியிருந்தன.

டில்ருவன் பெரேரா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் களமிறங்கிய போதிலும் அவர்களால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

இறுதியில் இலங்கை அணி 236 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்க , போட்டியில் நியூசிலாந்து 423 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

போட்டியில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்களையும் இலங்கை 104 ஓட்டங்களையும் பெற்றன.

இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய நியூசிலாந்து ஹன்ரி நிக்கொல்ஸ் மற்றும் டொம் லெதமின் அபார சதங்களின் மூலம் 585 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.

போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 660 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன் நேற்றைய நான்காம் நாளிலேயே இலங்கை அணி முதல் 6 விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

இலங்கை அணி தொடர்ச்சியாக அடைந்த இரண்டாவது தொடர் தோல்வி இதுவென்பதுடன் , நியூசிலாந்து டெஸ்ட் அரங்கில் அடைந்த தொடர்ச்சியான ஆறாவது தொடர் வெற்றியாகும்.

Sharing is caring!