பங்களாதேஷிற்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்களைப் பெற்றது.

அஞ்சலோ மெத்யூஸ் 87 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர். திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் சபிஹூல் இஸ்லாம், சௌம்ய சர்கார் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

வெற்றி இலக்கான 295 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 4 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்தும் இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சில் பங்களாதேஷ் வீரர்களால் பிரகாசிக்க முடியவில்லை.

அனாமுல் ஹக், முஷ்பிஹூர் ரஹீம், மொஹமட் மிதுன், மஹமதுல்லா, சபீர் ரஹ்மான் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

செளம்ய சர்கார் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், தஜிதுல் இஸ்லாம் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் அணியால் 36 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதனையடுத்து, தொடரை 3-0 எனும் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

Sharing is caring!