படுதோல்வியடைந்த மான்செஸ்டர் யுனைடட்

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணியை, அவர்களது சொந்த மண்ணிலேயே 3-0 என பந்தாடியது டாட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்ஸ்.

முதல் போட்டியில் லெஸ்டரை வீழ்த்தி நல்ல துவக்கம் பெற்றாலும், இரண்டாவது போட்டியில் கத்துக்குட்டி பிரைட்டனிடம் தோல்வியடைந்தது யுனைட்டட். பயிற்சியாளர் முரினோவுக்கும், வீரர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அணியின் மீதான நம்பிக்கையை திரும்ப கொண்டு வர  இந்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலை. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் பலமான டாட்டன்ஹேம் அணியுடன் யுனைட்டட் மோதியது.

முதல் பாதியில் மான்செஸ்டர் யுனைட்டட் சிறப்பாக விளையாடியது. டாட்டன்ஹேம் அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. இதனால், அந்த அணியின் டிபென்ஸ் வீரர்கள் அடிக்கடி தவறுகள் செய்தனர். யுனைட்டட் அணிக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அதில் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முக்கியமாக லூக்காகு எதிரணி வீரர்களையும் கோல் கீப்பரையும் தாண்டி சென்று யாருமே இல்லாத கோல் போஸ்டுக்குள் கோல் அடிக்க வேண்டிய எளிய வாய்ப்பையும் தவற விட்டார். முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது.

இரண்டாவது பாதி துவங்கியதில் இருந்து டாட்டன்ஹேம் ஆதிக்கம் செலுத்தியது. 50வது நிமிடத்தில் கிடைத்த ஒரு கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, டாட்டன்ஹேமின் ஹேரி கேன் கோல் அடித்தார். அடுத்த சில நிமிடங்களில், லூகாஸ் மோரா கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுக்க, மான்செஸ்டர் யுனைட்டட் அணி திக்குமுக்காடியது. அதன்பின் யுனைட்டட் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 84வது நிமிடத்தில், கேன் கொடுத்த பாஸை கடத்திச் சென்ற லூகாஸ், மீண்டும் ஒரு சூப்பர் கோல் அடித்து 3-0 என போட்டியை முடித்து வைத்தார். 3 போட்டிகளில் இரண்டில் தோற்றுள்ளதால், யுனைட்டட் 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3 வெற்றிகளுடன் டாட்டன்ஹேம் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

Sharing is caring!