பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் சிக்கிய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் சிக்கிய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் உள்ள செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. அப்போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், பந்தை சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் நடத்தை விதிமுறைகளை சண்டிமால் மீறி விட்டதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஐ.சி.சி., அடுத்த நடைபெறவுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதித்தது.

மேலும் அப்போட்டிக்கான சம்பளம் முழுவதையும் சண்டிமால் அபராதமாக செலுத்தவும் ஐ.சி.சி. உத்தரவிட்டது. இதையடுத்து, வரும் சனிக்கிழமை பிரிட்ஜ்டவுனில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் சண்டிமால் விளையாடமாட்டார்.

இதேபோல் பயிற்சியாளர் ஹதுருசிங்கா மற்றும் மேலாளர் குருசிங்கா ஆகியோருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

Sharing is caring!