பளு தூக்கல் விளையாட்டில் வட மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனை விஜயபாஸ்கர் ஆர்ஷிகா

பளு தூக்கல் விளையாட்டில் வட மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனையாகத் திகழ்கிறார் விஜயபாஸ்கர் ஆர்ஷிகா.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி பயிலும் ஆர்ஷிகா, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பளு தூக்கல் விளையாட்டில் பிரவேசித்துள்ளார்.

தனது 13 ஆவது வயதில் பளு தூக்கல் விளையாட்டை ஆரம்பித்த இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார்.

2014 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் இன்று வரை பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

கனிஷ்ட பிரிவில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 4 தங்கப்பதக்கங்களையும் சிரேஷ்ட பிரிவில் 3 வெள்ளி, 2 தங்கப்பதக்கங்களையும் ஆர்ஷிகா வென்றுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பளு தூக்கல் போட்டிகளில் மூன்று தேசிய சாதனைகளுடன் வெற்றியீட்டியமை ஆர்ஷிகாவின் மிக அண்மைய பெறுபேறாகும்.

திருகோணமலை – கந்தளாய் அக்ரபோதி கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் அவர் 63 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டிருந்தார்.

Snatch முறையில் 77 கிலோகிராமும், Clean and Jerk முறையில் 101 கிலோ கிராமும் அடங்கலாக மொத்தம் 178 கிலோகிராம் எடையைத் தூக்கிய ஆர்ஷிகா, மூன்று பிரிவுகளிலும் தேசிய சாதனையை புதுப்பித்தார்.

ஆர்ஷிகா இந்த தேசிய சாதனையை 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை நான்கு தடவைகள் புதுப்பித்துள்ளார்.

நந்தினி குணசேகர தனது 32 ஆவது வயதில் 2006 ஆம் ஆண்டில் நிலைநாட்டிய சாதனையை 11 வருடங்கள் கழித்து ஆர்ஷிகா தனது 16 ஆவது வயதில் முறியடித்துள்ளார்.

நந்தினி குணசேகர Snatch முறையில் 75 கிலோகிராமும், Clean and Jerk முறையில் 95 கிலோகிராமும் அடங்கலாக மொத்தம் 170 கிலோகிராம் எடையைத் தூக்கி சாதனை படைத்திருந்தார்.

அந்த சாதனையை ஆர்ஷிகா 2017 ஆம் ஆண்டில் தேசிய இளையோர் பளு தூக்கல் போட்டிகளின் போது முறியடித்துள்ளார்.

அப்போது அவர் Snatch முறையில் 73 கிலோகிராமும், Clean and Jerk முறையில் 98 கிலோகிராமும் அடங்கலாக 174 கிலோகிராம் எடையைத் தூக்கி சாதித்தார்.

இவ்வருடம் நடைபெறும் 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணத்திற்கு முதல் தங்கப்பதக்கத்தை ஈட்டிக்கொடுத்த பெருமையும் ஆர்ஷிகாவையே சாரும்

Sharing is caring!