பாகிஸ்தானின் கருத்தை மறுக்கும் ஹரின்

இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியமைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் இந்த விடயத்தகெ் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுமாறு இலங்கை அணி வீரர்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக பாகிஸ்தானின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாட் ஹூசைன் சௌத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தக் கருத்தை மறுத்துள்ள ஹரின் பெர்னாண்டோ, 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் காரணம் காட்டியே இந்தத் தொடரிலிருந்து இலங்கை அணி வீரர்கள் விலகியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடரிலிருந்து விலகிய வீரர்களின் முடிவை மதித்து, குறித்த தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ள வீரர்களை உள்ளடக்கி சிறந்ததொரு குழாம் பெயரிட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பெயரிடப்பட்டுள்ள இலங்கைக் குழாம் பலமானது எனவும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கான இயலுமை அந்தக் குழாத்துக்கு இருப்பதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!