பாகிஸ்தானின் புதிய தலைமை பயிற்றுநராக மிஸ்பா உல்ஹக்

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் (Misbah Ul Haq) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவ்வணியின் தெரிவுக்குழுவின் தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் செயற்படவுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் சர்வதேச கிரிக்கெட் பேரவையும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

இதனையடுத்து, மிஸ்பா உல் ஹக் 3 வருடங்கள் இந்தப் பதவியில் நீடிக்கவுள்ளார்.

மிஸ்பா உல் ஹக்கின் பயிற்றுவிப்பின் கீழ் பாகிஸ்தான் தனது முதல் தொடரை இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

அந்தத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்த இரு தொடர்களுமே பாகிஸ்தான் அதன் சொந்த மண்ணில் வைத்து விளையாடும் தொடர்களாக பதிவாகவுள்ளன.

இதனிடையே, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் (Waqar Younis) நியமிக்கப்பட்டுள்ளார்.

1990 தொடக்கம் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த வக்கார் யூனிஸ், பாகிஸ்தானுக்கான Hall of Fame விருது பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆசஷ் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.

மென்செஸ்டரில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Sharing is caring!