பாகிஸ்தான் மக்களின் இதயங்களை வென்ற இலங்கை வீரர் டி சில்வா..!!

ராவல்பிண்டியில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியின் வெற்றியாளர் யார் என்பது குறித்து இலங்கை வீரர் தனஞ்ஜெய டி சில்வா அளித்த பதில், பாகிஸ்தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

அதன் படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த டிசம்பர் 11ம் திகதி தொடங்கியது. மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட போட்டி இறுதியில் டிராவில் முடிவடைந்தது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது. தனஞ்ஜெய டி சில்வா ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார்.

5வது நாள் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்கள் எடுத்தது. அபித் அலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசினார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 109 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் புதுமுக வீரர் அபித் அலி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

போட்டிக்கு பின் சதமடித்த இலங்கை வீரர் தனஞ்ஜெய டி சில்வா ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார். அப்போது, இந்த டெஸ்ட் போட்டியில் மழை, கிரிக்கெட் அல்லது பொதுமக்கள் ஆகியோரில் வென்றவர் யார்? என நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த டி சில்வா, பாகிஸ்தான் அணி தான் வெற்றியாளர் என நேர்மையாக பதிலளித்தார். சில்வாவின் பதில் பாகிஸ்தானியர்களின் இதயங்களை வென்ற நிலையில், பலர் அதை பகிர்ந்து வருவதால் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியுள்ளது.

Sharing is caring!