பிராத்வைட், ஹெட்மியர் அரைசதம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில், வெஸ்ட் இண்டீசின் பிராத்வைட், ஹெட்மியர் அரைசதம் கடந்தனர். டாம் பிளண்டெல் சதமடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 520 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 447 ரன்கள் எடுத்திருந்தது. பிளண்டெல் (57), பவுல்ட் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

பிளண்டெல் சதம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்தின் பிளண்டெல், பவுல்ட் ஜோடி பொறுப்பாக ஆடியது. இப்போட்டியில் அறிமுகமான, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பிளண்டெல், தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி, 9 விக்கெட்டுக்கு 520 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பிளண்டெல் (107), பவுல்ட் (18) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நல்ல துவக்கம்: பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரெய்க் பிராத்வைட், கைரன் பாவெல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த போது, மாட் ஹென்றி பந்தில் பாவெல் (40) அவுட்டானார். பின் இணைந்த பிராத்வைட், ஷிம்ரான் ஹெட்மியர் ஜோடி பொறுப்பாக ஆடியது. நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த போது, மாட் ஹென்றி ‘வேகத்தில்’ ஹெட்மியர் (66) வெளியேறினார். வாக்னர் பந்தில் ஷாய் ஹோப் பவுண்டரி அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை எட்டியது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து, 172 ரன்கள் பின்தங்கி இருந்தது. பிராத்வைட் (79), ஹோப் (21) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்ரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

Sharing is caring!