பிரேசில் ப்ளேயர்ஸ்கிட்ட கால்பந்துக்கான காந்தம் இருக்கு

என்னைப் பொறுத்தவரை இந்த உலகக் கோப்பையில் பிரேசில்தான் ஃபேவரிட். அவர்களுக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. என்னதான் கோச், டேக்டிக்ஸ் ஒருபக்கம் இருந்தாலும், வீரர்கள் வேறுவேறு கிளப்களுக்கு விளையாடினாலும், உலகத்திலேயே வேறெந்த அணிக்கும் இல்லாத ஈர்ப்புத்தன்மை பிரேசிலுக்கு மட்டுமே இருக்கிறது. பிரேசில் விளையாடுவது உலகக் கோப்பைக்கே பெருமை. ஃபுட்பாலுக்கு பிரேசில் ஒரு மேக்னட் மாதிரி. பிரேசில் – உலகக் கோப்பை இரண்டையும் பிரிக்க முடியாது.

கடந்த உலகக் கோப்பையில் பிரேசில் பயிற்சியாளர் டுங்காவுக்கும் சீனியர் வீரர்களுக்கும் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போதுள்ள பிரேசில் அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். பல வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் போன்ற பெரிய தொடர்களில் விளையாடியுள்ளனர். டாப் லெவல் கிளப் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்கள், இவர்களுடன் நெய்மரின் ஃபார்ம் இரண்டும் சேரும்போது, அவர்கள் ஆட்டம் வேற லெவலில் இருக்கும். சமீபத்தில் ஆஸ்திரியாவுக்கு எதிராக மூன்று கோல்கள் அடித்திருந்தனர். இதில் மிஸ் செய்தது ஏராளம். இதையெல்லாம் பார்க்கும்போது பிரேசில் இந்தமுறை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் பல பேர் தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் ப்ரொஃபைல், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பிரேசில் கொடியை வைத்திருப்பதிலேயே தெரியும்.

அதற்காக மற்ற அணிகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. மற்ற அணிகளிலும் லிவர்புல், மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட், பார்சிலோனா போன்ற பெரிய கிளப்களில் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், பெர்ஃபாமென்ஸ், வயது அடிப்படையில் பார்க்கும்போது, பிரேசில் அணியில் ரொம்ப சீனியர்ஸ் இல்லை. ஒரு பேலன்ஸ்டு அணியாக உள்ளது. மற்ற அணிகளில் சீனியர் பிளேயர் ஒருவர் 85 சதவீதம், மற்ற பிளேயர் 95 சதவீதம் பெர்ஃபாமன்ஸ் செய்வர் எனில், பிரேசில் அணியில் ஒவ்வொரு வீரரின் பெர்ஃபாமென்ஸும் 95 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த அணியின் சராசரியும் பெட்டராக இருக்கிறது. ஃபிரெண்ட்லி மேட்ச்சாக இருந்தாலும் சரி, உலகக் கோப்பை தகுதிச் சுற்றாக இருந்தாலும் சரி, பிரேசில் எல்லாப் போட்டிகளையும் ஒரே மாதிரி எதிர்கொள்வது பாராட்டுக்குரியது.

`பிரேசில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஆனால், 11 பேர் கொண்ட ஒரு அணியாக பார்க்கும்போது பிரேசில் அணி அவ்வளவு சிறப்பாக இல்லை’ என்ற கருத்து நிலவுகிறது. ஒரு பயிற்சியாளரின் பார்வையில் பார்க்கும்போது ஃபுட்பால் என்பது லெவன் வெர்சஸ் லெவன் கேம். ஒவ்வொரு இன்டிவிஜுவல் பொசிஷனிலும் அவர்கள் ஸ்டார்ஸ்.

ஸ்பெய்ன் அணியின் டிக்கி டாக்கா ஸ்டைல் காலாவதியாகி வருகிறது. கடந்த உலகக் கோப்பையிலேயே அது எக்ஸ்போஸ் ஆகிவிட்டது. எல்லா பயிற்சியாளர்களும் அதை எப்படி நிறுத்துவது என யோசிக்கத் தொடங்கிவிட்டனர். ஜெர்மனி வழக்கம்போல சவாலாக இருக்கும். அவர்கள் உடல் ரீதியாக ஸ்ட்ராங். டெக்னிக்கலி அதைவிட ஸ்ட்ராங். ஜெர்மனி எப்போதுமே பவர்ஹவுஸ். பயிற்சியாளரின் அனுபவமும் கை கொடுக்கும். அவர் உலகக் கோப்பையை வென்றவர். தவிர, அவரது வீரர்களும் பேயர்ன் முனிச் போன்ற சிறந்த கிளப்களில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்கள். இருப்பினும், தற்போதுள்ள இளம் பிரேசில் அணியுடன் ஒப்பிடும்போது, ஜெர்மனி கொஞ்சம் தொய்வடைந்தது போல தெரிகிறது. காலிறுதி வரும்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். பிரேசில், ஜெர்மனி தவிர்த்து ஃபிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்லத் தகுதியான அணிகள். பெல்ஜியத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

Sharing is caring!