பைனல் இன்று ஆசிய சாம்பியன் யார்?

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. விறுவிறுப்பான இப்போட்டியில் வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.

இலங்கை,  ஹாங்காங் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், 2 வெற்றி, 1 டையுடன் இந்தியாவும், 2 வெற்றி, 1 தோல்வியுடன் வங்கதேச  அணியும் பைனலுக்கு முன்னேறி உள்ளன.ஆசிய சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் விறுவிறுப்பான இறுதிப் போட்டி துபாயில் இன்று நடக்க உள்ளது. இந்திய அணியைப் பொறுத்த வரையில், துவக்க ஜோடி ரோகித், தவான் மிகப்பெரிய பலமாக உள்ளனர்.

இத்தொடரில் தவான் 4 போட்டியில் 327 ரன் (2 சதம்) குவித்து முதலிடத்தில் உள்ளார். ரோகித் 269 ரன்களுடன் (1 சதம், 2 அரைசதம்) 3வது இடத்தில் உள்ளார். கிட்டத்தட்ட எல்லா போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு  இந்த ஜோடி முக்கிய பங்காற்றியுள்ளது.முதல் விக்கெட்டுக்கு களமிறங்கும் அம்பாதி ராயுடுவும் ஓரளவுக்கு தேறி விட்டார். ஆனால், அதன் பிறகுதான் இந்திய அணி தடுமாற்றம் காண்கிறது. முக்கியமாக முன்னாள் கேப்டன் டோனி ரொம்பவே திணறுகிறார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ரோகித், தவான் இல்லாத நிலையிலும் கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு 100 ரன் வரை சேர்த்து தந்தும், அதன் பின் மிடில் ஆர்டரில் நமது அணி திணறியது. எனவே, மிடில்  ஆர்டரில் சொதப்பினால் 240+ ரன் இலக்கு கூட கஷ்டமானதாகிவிடும்.பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், பூம்ரா மீண்டும் இணைகின்றனர். சாஹல், குல்தீப் சுழல் கூட்டணி வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி தரும். இதை சரி செய்ய தினேஷ் கார்த்திக்கு பதிலாக கே.எல்.ராகுல் இன்று  களமிறக்கப்படலாம்.

வங்கதேசத்தை பொறுத்த வரையில், முதல் முறையாக ஆசிய சாம்பியன் ஆக வேண்டுமென்ற ஆவலுடன் களமிறங்குகிறது. நேற்று முன்தினம் நடந்த கடைசி போட்டியில் பாகிஸ்தானை கட்டுப்படுத்திய வங்கதேசம் அபார  வெற்றி பெற்றது. கடந்த 2016ம் ஆண்டு ஆசிய கோப்பை பைனலிலும் இந்தியா, வங்கதேச அணிகளே மோதின. அப்போது டி20 தொடராக நடத்தப்பட்டது. பைனலில் இந்திய அணிக்கு வங்கதேசம் எவ்வித நெருக்கடியும் தராமல்  எளிதில் பணிந்தது. ஆனால் இம்முறை வங்கதேச அணி நல்ல பார்மில் உள்ளது.

இலங்கை, பாகிஸ்தானை பந்தாடியுள்ள வங்கதேசம், இந்தியாவையும் ஒருகை பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்ஸ்மேன்கள்  முஷ்பிகுர் ரகிம், மிதுன், மகமதுல்லா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். முஷ்பிகுர் இத்தொடரில் 4 போட்டியில் 297 ரன் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் முஷ்டாபிசுர் ரகுமான், ருபெல் ஹூசேன், கேப்டன்  மோர்டசா ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் தலைவலியாக இருப்பார்கள். கடந்த போட்டியில் முஷ்டாபிசுர் ரகுமான் 4 விக்கெட் வீழ்த்தி, பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.

இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இவர் 2வது இடத்தில் (8 விக்கெட்) உள்ளார். அதே சமயம்,  நட்சத்திர பேட்ஸ்மேன் தமிம் இக்பால் காயம் காரணமாக விளையாடாத நிலையில், தற்போது நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனும் காயமடைந்துள்ளது வங்கதேசத்திற்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. ஷாகிப் அல்  ஹசன் இல்லாத நிலையில் முஷ்டாபிசுருக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் நிச்சயம் அனல் பறக்கும் என நம்பலாம். இப்போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

Sharing is caring!