பொதுமக்களுக்கு வீரர்கள் எப்படி சமூக கருத்துகளை எடுத்து செல்ல வேண்டும் என்பதற்கு சச்சின் முன்னுதாரணம் – ஸ்ரீநிவாஸ் பிரசாத்

பொதுமக்களுக்கு விளையாட்டு வீரர்கள் எப்படி சமூக கருத்துகளை எடுத்து செல்ல வேண்டும் என்பதற்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்று ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீநிவாஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளிடையே சுகாதாரமான பழக்கங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் இந்திய அரசாங்கத்தின் தூய்மை இந்தியா திட்டம் என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமூக நலனுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு விளையாட்டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த அமர்வு ஐக்கிய நாடுகள் சபையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீநிவாஸ் பிரசாத் பேசுகையில், “இந்தியாவில் நகரங்கள், கிராமங்கள் என தேசம் முழுவதும் பல கோடி மக்களைச் சென்றடையும் விளையாட்டாக கிரிக்கெட் இருக்கிறது. கிரிக்கெட்டும், அதன் நட்சத்திரங்களும் சமூக கருத்துகளை பரப்ப முக்கியமான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட்டின் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். பள்ளி செல்லும் குழந்தைகளிடம் சுகாதாரமான பழக்கங்களை ஏற்படுத்த தேசிய அளவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சச்சின் கலந்து கொண்டார். குழந்தைகள், சாப்பிடும் முன் கையைக் கழுவ வேண்டும் என்று அந்தப் பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது. அதே போல சமீபத்தில் தூய்மை இந்தியா திட்டத்துக்கும் தூதராக செயல்பட்டுள்ளார்” என்று ஸ்ரீனிவாஸ் பிரசாத் கூறியுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகள் முக்கிய பொழுதுபோக்காக இருக்கிறது என்று கூறிய அமைச்சர், அதேசமயம், வளரும் நாடுகளில் பல லட்சம் குழந்தைகளிடம் அந்த விளையாட்டை எடுத்துச் செல்லும் சவால் நம் முன் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். மேலும், “இதற்கு முதலில் விளையாடுவதற்கான பாதுகாப்பான திறந்தவெளி மைதானங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனால் விளையாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்க முதலீடு செய்வதும், விளையாட்டில் கலந்து கொள்ளும் கலாச்சாரமும் முக்கியமானவை” என்று ஸ்ரீனிவாஸ் பிரசாத் பேசியுள்ளார்.

Sharing is caring!