போலி NIC இலக்கத்தை வழங்கிய SLC நிதிப்பிரிவு தலைவர்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு போலியான தேசிய அடையாள அட்டை இலக்கமொன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப்புலானாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் வழங்கிய தகவலின் போது இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவரான பியல் நந்தன திசாநாயக்க கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்து கிரிக்கெட் விஜயத்தின் தொலைக்காட்சி உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய 11 மில்லியன் அமெரிக்க டொலரில் முதல் தவணையான 5.5 மில்லியன் டொலரை வெளிநாட்டு வங்கிக்கணக்கிற்கு மாற்ற முயன்றமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பியல் நந்தன திசாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தயாரானதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவரான பியல் நந்தன திசாநாயக்க வெளிநாடு செல்வதை தடுக்கும் நோக்கில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து, உத்தரவையும் பெற்றுக் கொண்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவர் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் கிரிக்கெட் நிறுவனத்தின் மனித வள பிரிவின் சிரேஷ்ட முகாமையாளரின் மூலமே பெறப்பட்டுள்ளது.

அவர் வழங்கிய தகவலுக்கு அமைய , கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவர் வழங்கிய தேசிய அடையாள அட்டையின் இலக்கம் போலியானது என தெரியவந்துள்ளது.

எனினும், மீண்டும் விசாரணையொன்றை நடத்தி சரியான தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்தது.

சரியான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி வௌிநாடு செல்லும்போது அல்லது நாடு திரும்பும்போது விமானப் பயணத்தை தடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரை கைது செய்வதற்கு ஏதுவாக பின்னர் மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.

Sharing is caring!