மகளிர் பெடரேஷன் கிண்ண டென்னிஸ்: போராடி வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அமெரிக்கா!

மகளிர் பெடரேஷன் கிண்ண டென்னிஸ் தொடரில், லாட்வியாவை போராடி வீழ்த்தி அமெரிக்க அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

எவரெட்டில் ஆரம்பமான இரு அணிகளுக்கிடையிலான எதிர்பார்ப்பு மிக்க போட்டியில், முதல் ஒற்றையர் பிரிவு போட்டியில், சோபியா கெனின்னும், அனத்தேசிஜா செவஸ்டாவோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் சோபியா கெனின் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
……………

இரண்டாவது ஒற்றையர் பிரிவு போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், லாட்வியாவின் ஜெலனா ஒஸ்டபென்கோவும் மோதினர்.

இரசிகர்களை விறுவிறுப்பில் ஆழ்த்திய இப்போட்டியில், இரண்டு செட்டுகளுமே டை பிரேக் வரை நகர்ந்தது.

இதில் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
……………..
மாற்று ஒற்றையர் போட்டியில், அமெரிக்காவின் சோபியா கெனின்னும், லாட்வியா வீராங்கனை ஜெலனா ஓஸ்டபென்காவும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்குகளில் ஜெலனா ஓஸ்டபென்கா வெற்றிபெற்றார்.
…………….
அடுத்த ஒற்றையர் பிரிவு போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், அனத்தேசிஜா செவஸ்டாவோவும் மோதினர்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 3-6, 7-6 என்ற செட் கணக்குகளில் செவஸ்டாவோ வெற்றிபெற்றார்.

லாட்வியா அணி தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்ததால், 2-2 என்ற கணக்கில் புள்ளிகள் சமநிலைப் பெற்றது.
………….

இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி இரட்டையர் போட்டியில், அமெரிக்காவின் அலிஸன் ரிஸ்கே-பெத்தானி இணை ஓஸ்டபென்கோ-செவஸ்டோவா இணையை எதிர்கொண்டது.

இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இப்போட்டியில், அமெரிக்க ஜோடி 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 3–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இறுதிச் சுற்றில் நுழைந்த அமெரிக்கா, எதிர்வரும் ஏப்ரல் மாதம் புடாபெஸ்டில் நடக்கவுள்ள 12 நாடுகள் தொடரில் மோதுகிறது.

Sharing is caring!