மன்னார் மைதான புனரமைப்பு தொடர்பில் விசேட கூட்டம்

மன்னார் – பள்ளிமுனை சென்லூசியா கால்பந்தாட்ட விளையாட்டு மைதான புனரமைப்பு தொடர்பான விசேட கூட்டம் மன்னாரில் இன்று (15) இடம்பெற்றது.

மன்னார் – பள்ளிமுனை சென் லூசியா கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் 60 வருடங்கள் பழமையானது.

நகரத் திட்டமிடல் அமைச்சின் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2013 ஆம் ஆண்டு மைதான புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், மைதான புனரமைப்புப் பணிகள் உரிய காலப்பகுதியில் நிறைவுபெறாத நிலையில், கடந்த 5 வருடங்களாக மைதானத்தினைப் பயன்படுத்த முடியாநிலை காணப்பட்டது.

மைதான புனரமைப்புப் பணிகளின் இழுத்தடிப்பு தொடர்பில் கடந்த மாதம் 15ஆம் திகதி நியூஸ்பெஸ்ட் சக்தியின் தேடலில் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையில் மன்னார் – பள்ளிமுனை சென்லூசியா மைதான புனமைப்பு தொடர்பிலான கூட்டம் நகரத் திட்டமிடல் அதிகார சபையின் திட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ஜெமுனு பிரேமவர்தன தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் நகர சபை தலைவர் அன்டனி டெவின்சன் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள், சென்லூசியா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பள்ளிமுனை மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, மைதான புனமைப்பிற்கு நகரத் திட்டமிடல் அதிகார சபையினால் 15 மில்லியன் ரூபாய் நிதி மேலதிமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது மன்னார் நகர சபைத் தலைவர் அன்டனி டெவின்சன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மைதான புனரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கையிருப்பிலுள்ள 3 மில்லியன் ரூபா நிதியுடன் மொத்தமாக18 மில்லியன் ரூபா செலவில் மைதான புனரமைப்புப் பணிகளை மீள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் உறுதிமொழி தந்திருக்கிறார்கள். மிகவிரைவில் மைதானத்தினை 6 வருடங்களாக செய்துதருவதாகக் கூறி குறிப்பிட்ட வேலைதான் நடந்திருக்கிறது. மிகவிரைவில் செய்வதாக நம்புகின்றேன். கடந்த மாதம் சக்தி ரீவிக்கு நாங்கள் செய்தி
வழங்கியிருந்தோம். அதனடிப்படையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. சக்தி ரீவிக்கு நன்றி கூறுகின்றதாக, சென் லூசியா விளையாட்டு கழகத்தின் தலைவர் அன்ரன் பிகராடோ தெரிவித்துள்ளார்.

Sharing is caring!