மறக்க முடியுமா இந்த நாளை? ஜென்டில்மேன் பந்துவீச்சாளரின் இதுவரை முறியடிக்க முடியாத சாதனை!

கிரிக்கெட் உலகைத் தனது அசுரத்தனமான பந்துவீச்சால் மிரள வைத்த கோர்ட்னி வால்ஷின் ஒரு ஓட்டத்திற்கு 5 விக்கெட் வீழ்த்திய சாதனையை இன்றளவும் எந்த நாட்டுப் பந்துவீச்சாளராலும் முறியடிக்கப்படவில்லை.

கடந்த 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கை அணிக்கு எதிராக ஷார்ஜா கிண்ணம் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கோர்ட்னி வால்ஷ் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இலங்கைக்கு எதிராக பந்து வீசிய கோர்ட்னி வால்ஷ் 4.3 ஓவர்களில் 3 மெய்டன்கள் எடுத்து ஒரு ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதாவது ஒரு ஓட்டத்திற்கு 5 விக்கெட் வீழ்த்தி வால்ஷ் சாதனை புரிந்தார். அவரின் இந்த சாதனையானது இன்றளவும் எந்த நாட்டுப் பந்துவீச்சாளராலும் முறியடிக்கப்படவில்லை.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்கள் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய ரிச்சார்ட்ஸன் சதம் அடித்து 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிரினீட்ஜ் 67 ஓட்டங்களில் வெளியேறினார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் என்ற வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் ரிச்சார்ட்ஸ் 39, ஹார்பர் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

249 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியில் ரணதுங்கா, அரவிந்த் டி சில்வா, குருசிங்கே, திலகரத்னே, மகானாமா போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அசுரத்தனமான பந்துவீச்சுக்கு முன் நிற்க முடியவில்லை.

மார்ஷல், கிரே, பெஞ்சமின், வால்ஷ் என 4 வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தும் மின்னல் வேகத்தில் களத்தில் பாய்ந்தது. இலங்கை வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து வெளியேறினர்.

அதிலும் கடைசி 5 விக்கெட்டுகளும் வால்ஷின் பந்துவீச்சுக்கு இரையாகின. 28 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த இலங்கை அணி 55 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களில் தோல்வியை தழுவியது.

4.3 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் எடுத்து ஒரு ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வால்ஷ் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

Sharing is caring!