மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 29 ஆம் திகதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்க இருந்தது. முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைந்திருந்தது. மே 24ஆம் திகதி வரை இந்தியாவில் 9 நகரங்களில் இந்த போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டு நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் கூட்டமாக திரள்வதை தடுக்க வேண்டும் என்றும், இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட எல்லா தேசிய விளையாட்டு அமைப்புகளும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய விளையாட்டுத்துறை உத்தரவு பிறப்பித்தது. வெளிநாட்டினருக்கான விசா வழங்குவது நிறுத்தப்பட்டதால், வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டது. அத்துடன் மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15ஆம் திகதி (நேற்று வரை) தள்ளி வைக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் அடுத்தகட்ட முடிவை பொறுத்து ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால் மே 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா, பொருளாளர் அருண் துமால், ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல், ஐ.பி.எல். தலைமை ஆபரேட்டிங் அதிகாரி ஹேமங் அமின் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தற்போதைய நிலைமை குறித்தும், ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவசர ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காலவரையின்றி தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஐ.பி.எல். தலைமை ஆபரேட்டிங் அதிகாரி ஹேமங் அமின் நேற்று காலை 8 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அடுத்த கட்ட அறிவிப்பு வரும்வரை ஐ.பி.எல். போட்டி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். ஊரடங்கு தொடர்வதால் ஏப்ரல், மே மாதங்களில் இந்த போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார்.

கொரோனா யுத்தத்தில் இருந்து விடுபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் ஐ.பி.எல். குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக அதாவது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்தும் திட்டமும் கிரிக்கெட் வாரியத்தின் யோசனையில் உள்ளது. ஆனால் அந்த சமயத்தில் சில சர்வதேச தொடர்கள் வருவதால் அதிலும் சிக்கல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய அரசு கைவிரித்ததால், 2-வது ஐ.பி.எல். போட்டி தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதே போல் 2014-ம் ஆண்டு பொதுதேர்தலின் போது தொடக்க கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.

ஆனால் இந்த சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த விளையாட்டு உலகத்தையும் புரட்டிபோட்டு விட்டது. 2-வது முறையாக தள்ளி போடப்பட்டுள்ள இந்த ஐ.பி.எல். திருவிழாவை நடத்த முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் கோடிவரை வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் ரூ.680 கோடியை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு ஊதியமாக வழங்குவார்கள். இந்த வகையில் வீரர்களும் பெரும் தொகையை இழப்பார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.

Sharing is caring!