முச்சதம் அடித்து அசத்தினார் டேவிட் வார்னர்

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டில் நேற்று ஆரம்பமானது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் இருந்தது. டேவிட் வார்னர் 166 ஓட்டங்களுடனும் லபுஸ்சாக்னே 126 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2 ஆவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. 80 ஆவது ஓவரில் அவுஸ்திரேலியா 350 ஓட்டங்களைப் பெற்றது. இந்த ஜோடியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ‌ஷகீன்சா அப்ரிடி பிரித்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 369 ஆக இருந்தபோது மார்கஸ் லபுஸ்சாக்னே 162 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது முதல் முச்சதத்தை அடைந்தார். அவர் 389 பந்துகளை சந்தித்து 37 பவுண்டரிகளுடன் 300 ஓட்டங்களைத் தொட்டார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசிய 7 ஆவது வீரர் வார்னர் ஆவார்.

பாகிஸ்தான் அணிக்கெதிராக முச்சதம் விளாசிய 4 ஆவது வீரர், மேலும் அந்த அணிக்கெதிராக முச்சதம் விளாசிய இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் வார்னரைச் சாரும்.

இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 253 ஓட்டங்களைக் குவித்ததே வார்னரின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

Sharing is caring!