முதல் போட்டியிலேயே பார்சிலோனா அணி தோல்வி: இரசிகர்கள் அதிருப்தி!

ஸ்பெயினில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் நடப்பு சம்பியனான பார்சிலோனா அணி, தனது முதல் போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

சென். மாமஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், முன்னணி அணியான பார்சிலோனா அணி, அத்லெடிக் பில்போ அணியை எதிர்கொண்டது.

இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் கோல் போட முட்டி மோதிக் கொண்டன.

அத்தோடு வழமைக்கு மாறாக அத்லெடிக் பில்போ அணி, ஆக்ரோஷமாக விளையாடியது. இதன்பலனாக முற்பாதியில் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முற்பாதி கோல் எதுவுமின்றி சமநிலைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும், இரண்டு அணிகளினதும் ஆக்ரோஷம் நீண்டது.

எனினும், இறுதிவரை விட்டுக்கொடுக்காது போராடிய அத்லெடிக் பில்போ அணிக்கு 89ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது.

அணியின் வீரரான ஆரிட்ஸ் அடுரிஸ், அணிக்கான வெற்றி கோலை புகுத்தினார். இந்த கோலை அவர் பைசிக்கள் கோல் எனப்படும் முறையில் புகுத்தி அரங்கில் குழுமியிருந்த இரசிகர்களை கொண்டாட வைத்தார். இதனால் அத்லெடிக் பில்போ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியின் இறுதியில் பில்போ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

Sharing is caring!